Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அஸ்ஸாமில் மனித-யானை மோதல்: 1,100-க்கும் மேற்பட்ட மனிதர்கள், 246 யானைகள் உயிரிழப்பு!

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதல்களால், கடந்த சில தசாப்தங்களில் 1,147 மனிதர்களும், 246 யானைகளும் உயிரிழந்துள்ளதாக மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லபாரூவா தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் அஸ்ஸாம் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரெகிபுதீன் அகமது எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இத்தகைய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

அமைச்சர் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் தான் மிக அதிகபட்சமாக, 138 பேர் யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்த 2026-ஆம் ஆண்டில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளன. குறிப்பாக 2023-ல் 116 பேரும், 2018-ல் 115 பேரும், 2022-ல் 112 பேரும், 2024-ல் 110 பேரும், 2019-ல் 109 பேரும், 2021-ல் 108 பேரும், 2017-ல் 99 பேரும், 2016-ல் 98 பேரும், 2020-ல் 89 பேரும் இந்த மோதல்களால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் கோல்பாரா வனப்பகுதியில் அதிகபட்சமாக 195 பேரும், தான்சிரி வனப்பகுதியில் 143 பேரும் உயிரிழந்துள்ளதோடு, பக்ஸா, நாகோன், மேற்கு சோனித்பூர், கோலாகாட், கிழக்கு மற்றும் மேற்கு காமரூப், கிழக்கு கர்பி அங்லாங் ஆகிய வனக்கோட்டங்கள் இந்த மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதே காலகட்டத்தில் மின்சாரம் தாக்கியது, ரயில் விபத்துக்கள் மற்றும் விஷம் வைக்கப்பட்டதால் 246 யானைகள் உயிரிழந்துள்ளன. குறிப்பாக 2017-ல் 42 யானைகளும், 2025-ல் 36 யானைகளும், 2024-ல் 27 யானைகளும் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 5 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் 4 யானைகள் மின்சாரம் தாக்கியும், ஒரு யானை வேட்டையாடப்பட்டதாலும் உயிரிழந்துள்ளன. ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் 33 யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, வனப்பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் யானைகளின் உயிரிழப்பை முழுமையாக தடுக்க முடியவில்லை என அமைச்சர் கவலை தெரிவித்தார்.

அஸ்ஸாமில் மொத்தம் 18,33,592.84 ஹெக்டேர் பரப்பளவில் காப்பகக் காடுகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் உள்ளன. ஆனால், பிப்ரவரி 12, 2026 நிலவரப்படி, 3,15,997.1251 ஹெக்டேர் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-16 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் மூலம் 25,588.7656 ஹெக்டேர் வன நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இந்திய வனநிலை அறிக்கையின்படி, அஸ்ஸாமின் வனப்பரப்பு 2017-ல் 28,105 சதுர கிலோமீட்டராக (35.83%) இருந்தது, 2023-ல் 28,313.55 சதுர கிலோமீட்டராக (36.1%) சற்று அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயந்த மல்லபாரூவா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.