ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம், ஒரு வெள்ளி: வில்வித்தையில் 17 வயது கும்கும் மஹோத் சாதனை
நகோயா: 20வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா நேற்று ஹாக்கி, குத்துச்சண்டை, வில்வித்தை, மல்யுத்தத்தில் 6 தங்கத்தை அள்ளியது. நேற்று 14ம் நாள் முடிவில் 16 தங்கம், 25 வெள்ளி, 35வெண்கலம் என மொத்தம் 76 பதக்கங்களுடன் 5வதுஇடத்தில் இருந்தது. 15வது நாளான இன்று இந்தியா தங்க பதக்கத்துடன் வேட்டையை தொடங்கியது. மகளிர் தனிநபர் ரிகர்வ் வில்வித்தையில் போட்டியில் 17 வயதான கும்கும் மஹோத் கால்இறுதி போட்டியில் தென் கொரியாவின் காங் சே-யங்கை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து அரையிறுதியில் உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்க வெற்றியாளரான சீனாவின் ஜு ஜிங்யியை 6-2 என்ற கணக்கில் எளிதாகத் தோற்கடித்தார்.
இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் கடும் சவாலான ஒ யே-ஜினை எதிர்கொண்டார் . 5 செட்களின் முடிவில் இரு வீராங்கனைகளும் 5-5 என்ற கணக்கில் சமநிலை பெற்றதால், வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘ஷூட்-ஆஃப்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கொரிய வீராங்கனை 8 புள்ளிகள் மட்டுமே எடுக்க, கும்கும் தங்கம் வெல்ல 9 புள்ளி தேவை என்ற நிலையில் கடைசி அம்பை மிகத் துல்லியமாக 10 புள்ளி வட்டத்திற்குள் செலுத்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ரிகர்வ் வில்வித்தையில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் வென்றார். நடப்பு தொடரில் இரு அவருக்கு 3வது பதக்கமாகும்.
ஏற்கனவே மகளிர் ரிகர்வ் குழு போட்டியில் அங்கிதா பகத் மற்றும் கீர்த்தி ஷர்மா ஆகியோருடன் இணைந்து, பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த தென் கொரிய அணியை தங்கம், கலப்பு ரிகர்வ் குழுப்போட்டியில் நட்சத்திர வீரர் தீரஜ் பொம்மதேவராவுடன் இணைந்துவெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி இருந்தார். கோல்ஃப் போட்டியில் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில் இந்தியாவின் பிரணவி சரத் உர்ஸ் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச் சுற்றில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய அவர், 15-அண்டர்-பார் 265 என்ற புள்ளிக்கணக்கில் முதலிடத்தைப் பிடித்து இந்தத் தங்கத்தை உறுதி செய்தார்.
பிரணவி உர்ஸின் இந்த அதிரடி ஆட்டம், அதிதி அசோக் மற்றும் திக்ஷா தாகர் ஆகியோரைக் கொண்ட இந்திய மகளிர் கோல்ஃப் அணியை வெள்ளிப் பதக்கம் வெல்லவும் வழிவகுத்தது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே கோல்ஃப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை 23 வயதான பிரணவி உர்ஸ் பெற்றார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி;
ஆசிய விளையாட்டில் தனிநபர் ‘ரிகர்வ்’ வில்வித்தை பிரிவில் முதல்2 இடங்களை பிடிப்பவர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முடியும். அந்த வகையில் தங்கம் வென்ற இந்தியாவின் கும்கும் மஹோத் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு வெண்கலம்;
ஆசிய விளையாட்டு ஆடவர் டி.20ல் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இலங்கை-வங்கதேசம் இன்று மோதியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு165ரன் எடுத்தது.அடுத்து களம் இறங்கிய வங்கதேசம் 17.3ஓவரில் 102 ரன்னுக்கு சுருண்டது. இதனால் 63 ரன் வித்தியாசத்தில் இலங்கை வென்று வெண்கல பதக்கத்தை தட்டி தூக்கியது.
அரையிறுதியில் அமன்,அந்திம்;
மல்யுத்தத்தில் ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், தனது எதிராளியை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி அமன் செஹ்ராவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல், பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் அந்திம் பங்கல் தனது எதிராளியை 8-0 என்ற கணக்கில் எளிதாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.


