ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்; 18 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த இந்தியா: கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றது
டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆடவர் ரீகர்வ் குழு போட்டியில் இந்திய வீரர்கள், பலம் வாய்ந்த தென் கொரியா அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தியா வில்வித்தை வீரர்கள் ஏற்கனவே காம்பவுண்டு பிரிவில் 3 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், ஆடவர் ரீகர்வ் குழு இறுதிப் போட்டி நேற்று நடந்தது.
அதில் இந்திய வீரர்கள் யாஷ்தீப் போகே, அடானு தாஸ், ராகுல் அடங்கிய குழு, பலம் வாய்ந்த தென் கொரியா குழுவை எதிர்த்து போட்டியிட்டது. தென் கொரியா அணியில், சியோ மிங்கி, கிம் இயாசன், ஜாங் ஜிஹோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போட்டியின் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தென் கொரியா அணி, துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு 4-2 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பின் அற்புதமாக செயல்பட்ட இந்திய வீரர்கள் போட்டியின் திசையை மாற்றி, 5-4 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் ரீகர்வ் ஆடவர் பிரிவில், 2007ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த பிரிவில் தென் கொரியா, கடந்த 2009ம் ஆண்டு முதல் தொடர் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றி பெற்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் பானர்ஜி, கடந்த 2007ம் ஆண்டு நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மூவர் அணியில் இடம்பெற்றிருந்தார்.
