துபாய்: 8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (டி.20) துபாயில் நடந்து வருகிறது. தலா 4 அணிகள் என இரு குழுவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடந்து வருகிறது. இதில் 2 குழுவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் 7 முறை ஆசிய சாம்பியனான இந்தியா, கத்துக்குட்டி ஹாங்காங்குடன் மோதுகிறது. முதல் போட்டியில் தாய்லாந்தை போட்டு தாக்கிய இந்தியா இன்று வெற்றியுடன் அரையிறுதியை உறுதி செய்யும் முனைப்பில் களம் இறங்குகிறது. பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ், ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, பவுலிங்கில் ரேணுகாசிங், கிராந்தி கௌட், சரணி வலு சேர்க்கின்றனர்.
மறுபுறம் முதல் போட்டியில் தாய்லாந்திடம் தோல்வி அடைந்த ஹாங்காங் இன்று வென்றால் தான் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கமுடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. ஆனால் வலுவான இந்தியாவுக்கு எதிராக ஹாங்காங் தாக்குப்பிடித்து 20 ஓவர்களும் ஆடினாலே அவர்களுக்கு அது சாதனையாக இருக்கக்கூடும். இரு அணிகளும் இதற்கு முன் 2012 ஆசிய கோப்பையில் ஒரே ஒருபோட்டியில் மோதி உள்ளன. இதில் 142 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
சமாரி அத்தப்பட்டு ஹாட்ரிக் இலங்கைக்கு 2வது வெற்றி
ஆசிய கோப்பையில் பி குரூப்பில் நேற்றிரவு நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை-இந்தோனேசியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்தது. நிலக்ஷிகா சில்வா 50 ரன் அடித்தார். பின்னர் களம் இறங்கிய இந்தோனேசியா 18.3 ஓவரில் 49 ரன்னுக்கு சுருண்டது.இதனால் 75 ரன் வித்தியாசத்தில் இலங்கை வென்றது. கேப்டன் இலங்கை கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஹாட்ரிக் உள்பட 7 விக்கெட் வீழ்த்தினார். அவர் ஆட்டநாயகி விருதை நிலக்ஷிகா சில்வா வுடன் பகிர்ந்துகொண்டார். பி பிரிவில் 2வது வெற்றிபெற்ற இலங்கை அரையிறுதியை உறுதி செய்தது.



