ஆழ்வார்களின் பாசுரங்களையும், நாயன்மார்களின் பக்திப் பனுவல்
களையும், அனுபூதி அடைந்த மற்ற அருளாளர்களின் அருள் மொழிகளையும் கவனித்தால் ஒரு விஷயம் நமக்குத் துல்லியமாகத் தெரியும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவனைப் பற்றிப் பேசும்போது வெறும் தத்துவ விளக்கங்களைக் கொடுக்கவில்லை.
“நான் கண்டேன்.”
“நான் அனுபவித்தேன்.”
“என் உள்ளத்தில் அவனை உணர்ந்தேன்.”
என்ற தங்களுடைய அனுபவத்தையே பாடினார்கள்.
ஒருவருடைய இறை அனுபவம், இன்னொருவருடைய அனுபவத்தைப்போல இருக்க வேண்டிய அவசியமில்லை. இருக்கவும் முடியாது.
நமது பண்டைய மறைநூல்கள் இறைவனை விவரிக்கும் இடங்களிலெல்லாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்கின்றன. இறைவனை வார்த்தைகளால் முழுமையாகச் சொல்ல முடியாது.
தைத்திரீய உபநிடதம் ,“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ…”என்று சொல்கிறது.
எதைப்பற்றிப் பிடிக்க முடியாமல் மனம் திரும்பி விடுகிறதோ, எவனை விவரிக்க முடியாமல் வார்த்தைகள் திரும்பி விடுகின்றனவோ, அதுவே பிரம்மம்.
இன்னும் ஒரு விசித்திரமான முரண்பாட்டை உபநிடதம் சொல்கிறது.
“யஸ்யாமதம்... என்கிற மந்திரத்தில் இறைவனைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது; அவனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று உணர்கிறவனே அவனை உணர்ந்தவன். “நான் இறைவனை முழுமையாக அறிந்துவிட்டேன்” என்று நினைப்பவனோ
உண்மையில் அவனை அறியாதவன்.
அதனால் தான் ஆண்டாளும்,
“அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உன்னை…”
-என்று தன்னைச் சொல்லிக்
கொள்கிறாள்.
இறைவனை அடைவதற்கு அறிவைவிட அன்புதான் பிரதானம். “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?” என்று வள்ளுவர் கேட்கிறார்.
அறிவால் இறைவனை அளக்க முயல்கிறோம். தியானத்தாலும் தவத்தாலும் அவனை அடைய முயல்கிறோம். ஆனால், புராணங்கள் காட்டுவது வேறு ஒரு பாதையை. அன்பினால் தேடியவர்களிடம் இறைவனே வந்து தன்னை வெளிப்படுத்துகிறான்.
கண்ணனின் கதை இதைத்தான் காட்டுகிறது.
பெரிய பெரிய தவங்களைச் செய்தவர்களையும், அறிவால் அவனைத் தேடியவர்களையும் விட்டு விட்டு, அவனைத் தங்களுடைய குழந்தையாகவும் நண்பனாகவும் காதலனாகவும் எண்ணி அன்பு செலுத்திய ஆயர்களிடம் கண்ணனே சென்று கலந்து அவர்களோடு
விளையாடினான்.
நம்மாழ்வார் சொல்வதைவிட இதற்கு அழகான விளக்கம் தேவையில்லை:
‘‘பத்துடை அடியவர்க்கு எளியவன்;
பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்
நம் அரும்பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய்
களவினில் உரலிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு
இணைந்திருந்து ஏங்கிய எளிவே!”
பரமாத்மா என்று தெரிந்து கொண்டுதான் அவனை நேசிக்க வேண்டும் என்பதில்லை. சில நேரங்களில், அவன் யார் என்று தெரியாமல் நேசிப்பதுதான் உண்மையான அன்பாக இருக்கலாம்.
வேதங்கள் இறைவனைச் சுட்டிக்காட்டும்போது கூட, “நேதி, நேதி” - “இதுவல்ல, இதுவல்ல” - என்றுதான் சொல்கின்றன.
நீ வார்த்தைகளால் எதையெல்லாம் சொல்ல முடிகிறதோ, அது எதுவும் இறைவன் அல்ல. அதற்கும் அப்பால் எஞ்சி யிருப்பதே இறைவன்.
நம்மாழ்வார் இதை ஒரே வரியில் சொல்லிவிடுகிறார்:
“உயர்வற உயர்நலம் உடையவன்.”
நாம் ஒரு மையப்புள்ளியை வைத்து, “இதுதான் இறைவன்” என்று நிர்ணயித்து விட்டால், அந்தப் புள்ளியைத் தாண்டி அவன் இன்னும் உயரத்தில் போய்
விடுகிறான். இது கிட்டத்தட்ட அண்டத்தின் விரிவைப் போன்றது.
அண்டத்திற்கு எல்லை எங்கே என்று நம்மால் சொல்லமுடியுமா? அதை அளக்க முயலும்போதெல்லாம் அதன் எல்லை இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது.
திருமங்கையாழ்வார் திருநாங்கூர் மணிமாடக்கோயில் பெருமாளைப் பாடும்போது,
“நந்தா விளக்கே! அளத்தற்கரியாய்!”
என்று அழைக்கிறார்.
‘நந்தா விளக்கு’ என்றால் அணையாத விளக்கு. யாரும் தூண்டாமல் தானாகவே எப்போதும் ஒளிரும் விளக்கு. இறைவன் எக்காலமும் சுயம் பிரகாசமாக விளங்கும் ஞான வடிவம் என்பதையும், அவனது பெருமை எவராலும் அளக்க முடியாதது என்பதையும் இந்தச் சொல் உணர்த்துகிறது.
அதனால்தான் அவனை பிரம்மம் என்கிறோம்.
அண்டமும் அளவிட முடியாதது. பிரம்மமும் அளவிட முடியாதது.
இரண்டின் நடுவிலும், அவற்றின் எல்லையற்ற தன்மைக்குள்ளும், நாம் இருக்கிறோம்.
அதுதான் இன்னும் பெரிய புதிர்.
அதனால்தான் பெரியவர்கள் சொன்னார்கள்:
“கண்டவர் விண்டிலர். விண்டவர்
கண்டிலர்.”
இறைவனை உண்மையாக அனுபவித்தவன், அந்த அனுபவத்தை முழுமையாக வார்த்தைகளில் சொல்ல
முடியாமல் போகிறான்.
தமிழ் அருளாளர்களும், ஞானிகளும் இந்த ‘வார்த்தைகளைக் கடந்த பேரனுபவத்தை’ தங்கள் பாடல்களில் மிக அழகாகப் பதிவு செய்துள்ளனர்.
திருமூலர் (திருமந்திரம்): ஊமை ஒருவன் தான் கண்ட கனவை மற்றவர்களிடம் பேச முடியாமல் தவிப்பது போலத்தான் இறை அனுபவமும் என்கிறார் திருமூலர்:
‘‘உரைப்பார் உரைப்ப உகந்துஉள் இருக்கும்
இரைப்பார் இரப்பிலும் எய்தினாலும் எய்க்கும்
பரைப்பால் ஒளியைப் பரமனைப் பற்றி
உரைப்பார் ஊமையர் போல நிலத்தே!”
மாணிக்கவாசகர் (திருவாசகம்):
‘‘சொல்லுறு பொருள்கள்
தலைப்பெய்து அறியாச் சுடரே!”
வார்த்தைகளும், அவற்றிக்குரிய அர்த்தங்களும் எட்டிப் பிடிக்க முடியாத பேரொளி அவன் என்கிறார்.
தாயுமானவர்: ‘‘பேசாத மோன நிலை பெறுகை அன்றோ...” அனைத்துச் சிந்தனைகளும், வார்த்தைகளும் ஓய்ந்து போகும் ‘மோன நிலை’ (Silence) ஒன்றே இறைவனின் உண்மையான முகவரி என்கிறார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு சர்க்கரை பொம்மையின் கதையைக் கூறுவார்.
ஒரு சர்க்கரை பொம்மை கடலின் ஆழத்தை அளக்கக் கடலுக்குள் இறங்கியதாம். அது கடலுக்குள் இறங்கிய நொடியே கரைந்து கடலாகவே மாறிவிட்டது. அப்புறம் எப்படித் திரும்பி வந்து கடலின் ஆழத்தைப் பற்றி அறிக்கை எழுத முடியும்? இறைவனை உணர்ந்த ஜீவாத்மாவும் அந்தச் சர்க்கரை பொம்மை போல இறைநிலையோடு ஒன்றி கரைந்து விடுகிறது. அங்கே பேச ஆள் இல்லை; பேச வார்த்தைகளும் இல்லை!
இந்த அநுபூதி நிலையைத்தான்
அருணகிரிநாதர் வேண்டுகிறார்.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
முருகன் எனக்கு, ‘‘மனத்தை அலைபாய விடாமல் சும்மா இரு, வாயால் எந்தச் சொல்லும் பேசாதே (மௌனமாக இரு)” என்று உபதேசம் செய்தான். அந்த உபதேசத்தைக் கேட்ட மாத்திரத்தில், எனக்குள் ஏற்பட்ட பேரானந்த நிலையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.


