சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர், லடாக் மக்களின் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் வந்துள்ளது: 7ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீர், லடாக் மக்களின் வாழ்வில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்துள்ளதோடு, கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் விளையாட்டு துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் பிரமதர் மோடி கூறி உள்ளார். பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு, கடந்த 2019 ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது.
அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் சொத்து வாங்க தடை செய்த சட்டப்பிரிவு 35ஏவும் நீக்கப்பட்டது. இதன் 7ம் ஆண்டு நிறைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டு வரலாறாகின. இது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் பயணத்தில் ஒரு தீர்க்கமான புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக அமைந்தது.
அன்று முதல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வாழ்வில் பரவலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்துள்ளன. கல்வி, சுகாதாரம், தொழில்முனைவு மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் வாய்ப்புகள் பெருகியுள்ளன. பெண்கள் அல்லது விளிம்புநிலைச் சமூகங்கள் என, பல தசாப்தங்களாக தங்கள் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், இந்திய அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டதன் மூலம் அதிகாரமளிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஆண்டாக இது அமைந்துள்ளது. தேசிய ஒற்றுமைக்கான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பு தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. பல தசாப்தங்களுக்கு முன்பு அவர் கண்ட கனவு, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நனவானது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் முன்னேற்றத்திற்காகவும், ஒவ்வொரு குடிமகனும் பெரிய கனவுகளைக் காணவும், சாதனைகள் புரியவும், வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக்கத்தில் பங்களிக்கவும் வாய்ப்பளிப்பதை உறுதி செய்வதிலும் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். ஜம்முவில் உள்ள பாஜ கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சுனில் சேத்தி, ‘‘ஆகஸ்ட் 5, 2019 என்பது ஜம்மு-காஷ்மீருக்கு ஒற்றுமை, சமத்துவம் மற்றும் வளர்ச்சிக்கான ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்தது.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தியதோடு, ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையான அரசியலமைப்பு மற்றும் வளர்ச்சி ரீதியான ஒருங்கிணைப்புடன் இணைப்பதை உறுதி செய்தது’’ என்றார்.

