கமுதி : கமுதி அருகே ராமசாமிபட்டி அரசு பள்ளி மாணவிகள், கலைத் திருவிழா போட்டியில் நாடக பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
ராமநாதபுரம் முகமது சதக் கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி கடந்த வாரம் தொடங்கப்பட்டு, நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வில்லுப்பாட்டு, தெருக்கூத்துக் குழு, வீதிநாடகம், இலக்கிய நாடகம், பொம்மலாட்டம், பாவணை நடிப்பு, தனி நபர் நடிப்பு, பலகுரல் பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் வீதி நாடக குழு போட்டியில் 8 பேரும், இலக்கிய நாடக குழு போட்டியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் ஐந்து பேரும் கலந்து கொண்டனர். இரண்டு பிரிவுகளிலும் மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சான்றிதழ், பரிசு வழங்கினார். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், நாடகத்தை வடிவமைத்து, மாணவிகளுக்கு பயிற்சி அளித்த பள்ளியின் ஆசிரியர் அய்யனார் உள்ளிட்டோரை ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சிவாஅருணா, பள்ளி மேலாண்மை குழு தலைவி சாந்தி, பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் பாராட்டினர். போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை பள்ளியின் ஆசிரியரும், மணற்கேணி மண்டல ஒருங்கிணைப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.
