Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆணவம் தந்த பெரும் அடி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த 22ம்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய சுற்றுலா பயணிகள் 26பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு, பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனால் தொடரும் அடுத்தடுத்த நிகழ்வுகள், இருநாடுகளுக்கும் இடையே போரை உருவாக்கும் என்ற பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்க மறைமுக பொருளாதார தாக்குதலை கையில் எடுத்துள்ளது இந்தியா. ஏற்கனவே சிந்துநதிநீர் பங்கீடு நிறுத்தம், பாகிஸ்தானின் 80% விவசாயத்திற்கு உலை வைத்து விடும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் அலறி வருகின்றனர். தற்போது சர்வதேச நிதியை பெறுவதற்கும் இந்தியா ஏற்படுத்தியுள்ள முட்டுக்கட்டை, பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ளது.

தற்போது பாகிஸ்தானில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அல்லது வேறு நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அட்டாரி- வாகா எல்லையை இந்தியா மூடியது. இதனால் ரூ.3,800 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதித்துள்ளது.

அதேநேரத்தில், பாகிஸ்தானுடன் வர்த்தக உறவு துண்டிக்கப்படுவதால், இந்தியாவுக்கு பெருமளவில் பாதிப்பு இல்லை. அங்கிருந்து மிகவும் குறைவான பொருட்களைத்தான் இந்தியா இறக்குமதி செய்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். 1947ல் இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவான பிறகு, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் தொடங்கியது. பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள், ஒப்பந்தங்களுக்கு பின்பு வர்த்தகம் நடந்து வந்தது.

2017-18ம் நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையேயான மொத்த வர்த்தகம் 2.41 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி 1.92 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 488.5 மில்லியன் டாலராகவும் இருந்தது. ஆனால், 2019ல் காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில், 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானின் மிகவும் உகந்த நாடு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால், 2018 முதல் 2024 வரை இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2.41 பில்லியன் டாலரில் இருந்து 1.2 பில்லியன் டாலராக குறைந்தது.

பாகிஸ்தானின் இந்தியாவுக்கான ஏற்றுமதி, 2019ல் 547.5 மில்லியன் டாலராக இருந்தது, 2024ல் வெறும் 4,80,000 டாலராக ஆக சரிந்தது. இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை இந்தியாவின் பாகிஸ்தான் ஏற்றுமதி 447.7 மில்லியன் டாலராக உள்ளது. இதில் மருந்து பொருட்கள், பெட்ரோலியம், பிளாஸ்டிக், ரப்பர், கெமிக்கல், சாயங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், காபி, தேநீர், பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் ஆகியவை அடங்கும்.

அதே காலகட்டத்தில், பாகிஸ்தானின் இந்தியாவுக்கான ஏற்றுமதி 420,000 டாலர் மட்டுமே. இந்தவகையில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் அரசின் எதேச்சதிகார போக்கும், ஆணவமும் அங்குள்ள 24 கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது என்பதே நிதர்சனம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.