Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணம் வாங்கி மோசடி செய்ததாக புகார்; நடிகை அமீஷாவுக்கு பிடிவாரண்ட்

மொராதாபாத்: உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த பவன் வர்மா என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாட நடிகை அமீஷா படேலுக்கு 11 லட்சம் முதல் 14.5 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக நடந்த விசாரணையில், அமீஷா படேல் மும்பையிலிருந்து டெல்லி வரை வந்ததாகவும், ஆனால் அவரது குழுவினர் கூடுதலாக 2 லட்சம் ரூபாய் ரொக்கமாக கேட்டதாக கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை தர மறுத்ததால் அவர் பாதியிலேயே திரும்பிச் சென்றதுடன், தான் வாங்கிய பணத்தை திருப்பித் தர வழங்கிய 4.5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இந்த விவகாரத்தில் நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் அமீஷா படேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மொராதாபாத் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதுடன், வரும் மார்ச் 27ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.