Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வக்கீலை மற்ற கைதி போல் சமமாகவே நடத்த வேண்டும்: புழல் சிறை நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர் ஹரிஹரனும் ஒருவர். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனவும், தொலைபேசி மூலம் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறி ஹரிஹரனின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், மனுதாரர் ஒவ்வொரு முறையும் தனது மகனை காண சிறைக்கு செல்லும் போதும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

மற்ற கைதிகளை போல அவரையும் சமமாக நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஏ.கோபிநாத், ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனுதாரர் உள்ளிட்ட உறவினர்கள் ஹரிஹரனை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. வீடியோ கால் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் பேச அனுமதிக்கப்படுகிறது என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மற்ற கைதிகளை போல சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வசதிகளையும் ஹரிஹரனுக்கு புழல் சிறை நிர்வாகம் வழங்க வேண்டும். இதை சிறைத்துறை டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.