Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

32 பேருக்கு அர்ஜுனா விருது குகேஷ் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த சிறந்த செஸ் வீரர் டி.குகேஷ்,ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங்,பாரா ஒலிம்பிக் தடகள வீரர் பிரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோருக்கு உயரிய மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது நேற்று வழங்கப்பட்டது. சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு தியான்சந்த் கேல்ரத்னா விருது, துரோணாச்சாரியா விருது, அர்ஜூனா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு சிறந்த வீரர்,வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவரும் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற டி. குகேஷ், இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், பாரா ஒலிம்பிக்கில் தடகள போட்டியில் தங்கம் வென்ற வீரர் பிரவீன் குமார், பாரீஸ் ஒலிம்பிக்கின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 2 பதக்கங்கள் வென்ற வீராங்கனை மனுபாக்கர் ஆகியோருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.கேல் ரத்னா விருதுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது.

32 பேருக்கு அர்ஜுனா விருது: பாரீஸ் பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன்(காஞ்சிபுரம்), ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளில் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றிய நித்யஸ்ரீ சுமதி சிவன்(கரூர்), ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்று அசத்திய மனிஷா ராமதாஸ் (திருவள்ளூர்) ஆகிய தமிழக வீராங்கனைகள் உட்பட 32 பேருக்கு அர்ஜூனா விருதுகளை வழங்கி ஜனாதிபதி கவுரவித்தார்.

அர்ஜூனா விருதை வென்றவர்களுக்கு ரூ.15 லட்சம் மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ,விளையாட்டு துறை செயலாளர் சுஜாதா சவுத்ரி கலந்து கொண்டனர். ஜனாதிபதியிடம் விருது பெற்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினர்.