ஆம்ஸ்டெல்வீன்: உலக கோப்பை ஹாக்கி (ஆண்கள்) தொடரின் இ பிரிவில், அர்ஜென்டினா அணியுடன் மோதிய இந்தியா 3-5 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. நெதர்லாந்தின் வேஜ்னர் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியின் முதக் நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் டஸ்கானி அபாரமாக கோல் போட்டு இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்து 6வது நிமிடத்தில் டெல்லா டோரே அடித்த கோலால் அர்ஜென்டினா 2-0 என முன்னிலையை அதிகரித்தது. இதையடுத்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணி, சுக்ஜீத் 10வது நிமிடத்தில் கோல் அடிக்க 1-2 என இடைவெளியை குறைத்தது.
3வது குவார்ட்டரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா, 33வது மற்றும் 45வது நிமிடத்தில் டொமினி கோல் போட 4-1 என முன்னிலை பெற்றது. கடைசி கால் மணி நேர ஆட்டத்தில் கடுமையாகப் போராடிய இந்திய அணிக்கு 58வது நிமிடத்தில் சுக்ஜீத், 60வது நிமிடத்தில் ஹர்திக் கோல் போட்டனர். அர்ஜென்டினா தரப்பில் டஸ்கானி 53வது நிமிடத்தில் தனது 2வது கோலை பதிவு செய்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய அணி 2ம் கட்ட லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்வியுடன் இ பிரிவில் கடைசி இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை அடியோடு இழந்தது.



