Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரீல்ஸ் ரியல் ஆகுமா?

“பெ ண்களுக்கும், சிறுமிகளுக்கும் கடந்த ஆட்சியில் போதுமான பாதுகாப்பில்ைல. அவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வருவேன். தமிழகத்தின் எந்த ஒரு மூலையிலும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நடக்காத வகையில் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்,’’ என்பது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டங்களில், காதுகள் அனைத்திலும் வந்து மோதிய ஒரு உறுதிமொழி. இதை நம்பி, அவரது கட்சிக்கு வாக்களித்தவர்களில் கணிசமானவர்கள் ெபண்கள். கடந்த 10ம் தேதி, தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய் பெண்கள் பாதுகாப்பிற்காக சிறப்பு சிங்கப்படை அமைக்கப்படும் என்பது, அவர் கையெழுத்திட்ட முக்கிய மூன்று கோப்புகளில் ஒன்றாக இருந்தது.

இதற்காக சிலாகித்து முதல்வருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தன பெண்ணிய மேம்பாட்டு அமைப்புகள். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் நடந்த சம்பவங்கள், இது ஒரு வெற்று வாய்ஜால அரசு என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. சென்னை மெரீனாவில் மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி பலாத்காரம், வந்தவாசியில் ஓடும் லாரியில் சிறுமி கூட்டு பலாத்காரம், கிருஷ்ணகிரியில் காவல்நிலைய பெண் ஊழியர் பலாத்காரம் என்று அடுத்தடுத்து நிகழ்ந்த அவலங்கள், இதற்கு சாட்சியமாக அமைந்தது. இவை அனைத்திற்கும் உச்சமாக அரங்ேகறியுள்ளது கோவையில் நடந்த பத்து வயது பள்ளி மாணவிக்கு நடந்த பலாத்கார படுகொலை சம்பவம்.

சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த சிலரால் கடத்தி செல்லப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர், அவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு அங்குள்ள குளக்கரையில் வீசப்பட்டு கிடந்தார்.

ஊடகங்களில் இந்த தகவல் வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால் தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையோ, புகார் கொடுத்த பெற்றோரை சமாதானம் செய்யும் வேலையில் தான் முதலில் இறங்கியுள்ளது.

சிறுமியை கண்டுபிடித்து நெருங்கி விட்டோம். இன்னும் சில மணிநேரங்களில் மீட்டு விடுவோம் என்று பொய்யான உறுதியளித்தது. ஆனால், சிறுமியின் உயிரற்ற உடலை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. இதனால் கொதித்தெழுந்த மக்கள், அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மரணித்து போன ஏதுமறியாத அந்த சிறுமிக்காக, சிறிய வருத்தத்தை கூட உடனடியாக பதிவு செய்யவில்லை முதல்வர். தற்போது எதிர்கட்சிகளின் கடும் கண்டனத்தை எதிர்கொள்ள முடியாமல், கண் துடைப்புக்கு அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.

இவர் அரியணை ஏற வேண்டும் என்று ஆசைப்பட்ட கோடி மழலைகளில் ஒருவருக்கு தான், இந்த கொடூரம் நேர்ந்துள்ளது என்பதை, முதல்வர் சிறிதேனும் எண்ணிப்பார்க்க வேண்டும். இனிமேலும் இது போன்ற கொடூர நிகழ்வுகள் தொடராத வண்ணம், முதல்வர் சாட்டையை சுழற்ற வேண்டும். வெறுமனே ரீல்ஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாக உருவெடுக்க வேண்டும். மொத்தத்தில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பது இயற்கையின் நியதி. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் என்பது, மக்களுக்கு ஏற்றத்தை தரவேண்டும். மனம் வெறுத்து தூற்றுவதாக இருக்கக்கூடாது. இதை முதல்வரும், புதிய அரசும் புரிந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.