ஆரணி அருகே தானமாக உண்டியலில் போட்ட ரூ.4 கோடி சொத்தை கோயிலுக்கு பத்திரப்பதிவு செய்த ராணுவ வீரர்
ஆரணி ஆரணி அருகே ராணுவ வீரர் தானமாக வழங்கிய ரூ.4 கோடி மதிப்பு சொத்து கோயில் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த படவேடு அருகே கோணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்(65), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி. அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை. கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து தனியாக வசித்த விஜயனை அவரது 2 மகள்களும் கவனிக்கவில்லை.
இதனால் படவேடு கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான 2 வீடுகளின் பத்திரங்களையும் படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் உண்டியலில் விஜயன் செலுத்தினார். ஆனால் அந்த சொத்துகளை கோயில் பெயரில் மாற்றக்கூடாது எனக்கூறி தடை கேட்டு குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் விஜயன், கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை ஆணையரிடம் நேரில் சென்று அந்த சொத்தை கோயில் பெயரில் மாற்றிக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நேற்றுமுன்தினம் களம்பூர் பத்திரப்பதிவு அலுவலகம் சென்று ரூ.4 கோடி மதிப்புள்ள 2 வீடுகளையும் கோயிலுக்கு விஜயன் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். தொடர்ந்து இதற்கான ஆணையை கோயில் செயல் அலுவலர் பழனிசாமியிடம் வழங்கினார்.