பிக்ஸெல்லேப்!
சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் இன்று புகைப்படம், வீடியோ, ரீல்ஸ், யூடியூப் தம்ப்நெயில் மற்றும் விளம்பர பேனர்களை உருவாக்குவது அன்றாடத் தேவையாக மாறியுள்ளது. கணினியில் மட்டுமே செய்ய முடியும் என்று கருதப்பட்ட பல கிராபிக்ஸ் வடிவமைப்பு பணிகளை, தற்போது ஒரு ஸ்மார்ட்போனிலேயே எளிதாகச் செய்ய உதவும் செயலிகள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்றுதான் ‘பிக்ஸெல்லேப்' ( PixelLab). எளிமையான பயன்பாட்டு அமைப்பு மற்றும் பல்வேறு வடிவமைப்பு வசதி களால், கண்டென்ட் கிரியேட்டர்கள், யூடியூபர்கள், சமூக வலைதள நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர் வரை பலராலும் இந்த செயலி விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மிகப்பெரிய சிறப்பம்சம், புகைப்படத்தின் மீது விருப்பமான உரைகளை கவர்ச்சிகரமாக வடிவமைக்கும் திறன்தான். பல்வேறு எழுத்துருக்கள், எழுத்தின் நிறம், அளவு, நிழல், அவுட்லைன், 3D தோற்றம், கிரேடியன்ட், வளைவு போன்ற அம்சங்களை பயன்படுத்தி சாதாரண எழுத்துகளையே தொழில்முறை வடிவமைப்பாக மாற்ற முடியும். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளுக்கான எழுத்துருக்களையும் பயன்படுத்தும் வசதி இருப்பதால், உள்ளூர் மொழி உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த செயலியில் யூடியூப் தம்ப்நெயில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கவர், முகநூல் பதிவு, வாட்ஸப் ஸ்டேட்டஸ், போஸ்டர், அழைப்பிதழ், லோகோ, பேனர் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்க முடியும். தேவைக்கேற்ப படத்தின் அளவை மாற்றும் வசதியும் இருப்பதால், ஒவ்வொரு சமூக வலைதளத்திற்கும் தனித்தனியாக வடிவமைப்புகளை எளிதில் தயார் செய்யலாம்.
பின்னணியை மாற்றுவது, தேவையற்ற பகுதிகளை நீக்குவது, ஸ்டிக்கர்கள், வடிவங்கள் மற்றும் ஐகான்களைச் சேர்ப்பது போன்ற வசதிகளும் இதில் உள்ளன. மேலும், சொந்த புகைப்படங்கள், PNG படங்கள் மற்றும் பிற கிராபிக்ஸ் கோப்புகளை இணைத்து தனித்துவமான டிசைன்களில் உருவாக்கவும் முடியும்.
முக்கியமாக, யூடியூப் தம்ப்நெயில்களை உருவாக்குபவர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் பிக்ஸெல் லேப் மிகவும் முக்கியமான ஒன்று. கண்ணைக் கவரும் தலைப்புகள், வண்ணமயமான எழுத்துகள் மற்றும் துல்லியமான அமைப்புகளால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவமைப்புகளை சில நிமிடங்களிலேயே உருவாக்க முடிகிறது. அதேபோல், ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கான கவர் படங்களையும் சிறப்பாக வடிவமைக்கலாம்.


