Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அறியலாம் ஆப்ஸ்

அப்சைக்கிளிங் - ரீசைக்கிளிங் கிராஃப்ட்ஸ்!

வீட்டில் பயன்படுத்தாமல் ஓரமாக கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில், பழைய துணி, கண்ணாடி ஜாடி, டின் கேன், கார்ட்போர்டு பெட்டி போன்றவற்றை பெரும்பாலானோர் குப்பையாகவே நினைத்து தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால், இவற்றையே அழகான கைவினைப் பொருட்களாக மாற்றி மீண்டும் பயன்படுத்தும் வழிகளை எளிதாகக் கற்றுத்தருகின்றது ‘‘அப்சைக்கிளிங் & ரீசைக்கிளிங் கிராஃப்ட்ஸ்’’ (Upcycling & Recycled Crafts) செயலி.

கழிவுப் பொருட்களை தரமான பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றும் ‘‘அப்சைக்கிளிங்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, வீட்டில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருட்களை உருவாக்கும் வழிமுறைகளை வழங்குகிறது. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை பூந்தொட்டியாகவும், பழைய ஜீன்ஸ் துணியை ஹேண்ட் பேக்காகவும், டின் கேனை பென் ஸ்டாண்டாகவும், கண்ணாடி ஜாடியை அலங்கார விளக்காகவும் மாற்றுவது போன்ற பல கைவினை விஷயங்களை படிப்படியாக விளக்குகிறது. இதனால் கைவினையில் அனுபவம் இல்லாதவர்கள்கூட எளிதாக முயற்சி செய்து பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு செய்முறையும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மூலம் விளக்கப்படுவதால், பார்த்தபடியே செய்து முடிக்கலாம். வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள், பரிசுப் பொருட்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள், சேமிப்புப் பெட்டிகள், சுவர் அலங்காரங்கள் என நூற்றுக்கணக்கான யோசனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்தச் செயலி, கைவினை கற்றுக்கொடுப்பதைத் தாண்டி, குறைந்த செலவில் புதிய பொருட்களை உருவாக்கும் சிந்தனையையும் வளர்க்கிறது. தேவையில்லாத பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் குப்பைகளின் அளவு குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. அதே நேரத்தில், இந்த யோசனைகளைப் பயன்படுத்தி கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்து சிறு தொழிலாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.

பள்ளி மாணவர்களின் ‘‘Best Out of Waste” திட்டங்கள், கல்லூரி கைவினைப் போட்டிகள், இல்லத்தரசிகளின் வீட்டுத் தொழில் முயற்சிகள், கைவினைக் கலைஞர்களின் புதிய வடிவமைப்புகள் என பல தரப்பினருக்கும் இந்தச் செயலி பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக, குறைந்த முதலீட்டில் வருமானம் தரும் கைவினைப் பொருட்களை உருவாக்க விரும்புபவர்களுக்கு இந்தச் செயலி அதீத பலன் கொடுக்கும்.