எம்ஆதார்
இந்தியாவில் ஆதார் அட்டை வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் அரசு நலத்திட்டங்களைப் பெறுவது, சிம் கார்டு வாங்குவது, பயண முன்பதிவு செய்வது என அன்றாட வாழ்க்கையின் பல்வேறு தேவைகளில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஆதார் சேவைகளை இன்னும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ள அதிகாரப்பூர்வ மொபைல் செயலிதான் எம்ஆதார் (mAadhaar) செயலி.
இந்தச் செயலியின் மூலம் ஆதார் அட்டையின் அச்சுப் பிரதியை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது. ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் வடிவிலேயே ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். தேவையான நேரத்தில் சில நொடிகளில் ஆதார் தகவல்களை அணுகவும், சரிபார்க்கவும், பகிரவும் முடியும்.
சமீபத்தில் அறிமுகமான மேம்படுத்தப்பட்ட பதிப்பில், ஒரே செயலியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் ஆதார் விவரங்களை இணைத்து நிர்வகிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக செயலியை நிறுவ வேண்டிய அவசியம் குறைகிறது. குறிப்பாக வயதான பெற்றோர் அல்லது குழந்தைகளின் ஆதார் தகவல்களை பாதுகாப்பாக ஒரே இடத்தில் பராமரிக்க இது உதவுகிறது. பயணங்களில் எல்லாருடைய ஆதார் அட்டைகளையும் கொண்டு சென்று அதை ஒருவர் கவனமாக பார்த்துக்கொண்டே இருக்கும் பிரச்னை இனி இல்லை.
தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எந்த தகவல்களைப் பகிர வேண்டும் என்பதை பயனரே தேர்வு செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. முழு ஆதார் விவரங்களையும் பகிராமல், தேவையான தகவல்களை மட்டுமே பாதுகாப்பான QR குறியீடு அல்லது குறியாக்கப்பட்ட வடிவில் பகிர முடிவதால், தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் அபாயமும் இல்லை என்கிறது இந்திய அரசு.
இணைய வசதி இல்லாத சூழலிலும் செயலியின் சில சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தொலைதூர பகுதிகளிலும் அடையாளச் சரிபார்ப்பை எளிதாக மேற்கொள்ளலாம். மேலும், பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக் வசதி, முகஅடையாள அங்கீகாரம் (Face Authentication), ஆதார் சரிபார்ப்பு வரலாற்றைப் பார்ப்பது, விர்சுவல் ஐடி உருவாக்குவது போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இதுமட்டுமின்றி, முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற சில ஆதார் விவரங்களை செயலியின் மூலமே புதுப்பிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு சிறிய மாற்றத்திற்கும் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டிய தேவையும் குறை கிறது. குடும்ப உறுப்பினரின் ஒப்புதலுடன் முகவரியைப் புதுப்பிக்கும் வசதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளதால், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், மாணவர்கள், திருமணத்திற்குப் பிறகு புதிய முகவரிக்குச் சென்றவர்கள் போன்றோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
