குட்ரீட்ஸ்!
புத்தக வாசிப்பை விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள மொபைல் செயலிதான் குட்ரீட்ஸ் (GoodReads App). புதிதாக எந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. ஒரு புத்தகத்தின் பெயரைத் தேடினால், அதன் சுருக்கம், வாசகர்களின் மதிப்பீடு, விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களைப் பார்க்க முடியும்.
நாம் படிக்க விரும்பும் புத்தகங்களை “Want to Read” பட்டியலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே படித்த புத்தகங்களைப் பதிவு செய்து, அவற்றுக்கு மதிப்பெண் வழங்குவதன் மூலம் நம்முடைய வாசிப்பு டேட்டாக்களை பராமரிக்க முடியும். இதனால் ஒரு ஆண்டில் எத்தனை புத்தகங்களைப் படித்தோம் என்பதையும் கண்காணிக்கலாம்.
இதன் மற்றொரு சிறப்பு அம்சம், மற்ற வாசகர்களின் கருத்துகளை அறிந்துகொள்ள முடிவது. ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு அல்லது படிக்கத் தொடங்குவதற்கு முன்பு அதன் வாசகர் விமர்சனங்களைப் பார்த்து முடிவு செய்யலாம். நமக்குப் பிடித்த புத்தகங்களைப் போன்ற மற்ற புத்தகங்களையும் செயலி பரிந்துரைக்கும்.
மேலும், நமக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் புதிய புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளலாம். நண்பர்களை இணைத்துக்கொண்டு அவர்கள் படிக்கும் புத்தகங்களையும் பார்க்கலாம். இதன் மூலம் வாசிப்பு என்பது தனிப்பட்ட பழக்கமாக மட்டுமல்லாமல், மற்ற வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு அனுபவமாகவும் மாறுகிறது.
இதில் குழந்தைகளுக்கான புத்தகங்களையும் தனியாக பராமரித்து டேட்டாக்களை சேமிக்க முடியும். மேலும் நல்ல புத்தகம் எனில் நாமும் பலருக்கு பரிந்துரை செய்யலாம். குறிப்பாக, தொடர்ந்து புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விரும்புபவர்களுக்கு இந்தச் செயலி ஒரு டிஜிட்டல் வாசிப்பு டைரி போல செயல்படுகிறது. வாசிப்பு இலக்குகளை நிர்ணயித்து, அவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் வாசிப்பு பழக்கத்தையும் விடாமல் கடைபிடிக்க முடியும்.
அட்டையில்: அபர்நதி



