Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு நியமன உறுப்பினரை நியமிப்பது கவலைக்குரியது: ஜவாஹிருல்லா

சென்னை: அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு நியமன உறுப்பினரை நியமிப்பது கவலைக்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு நியமன உறுப்பினரை சேர்க்கும் முடிவு கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதன் பெயரில் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் சுயாட்சி மற்றும் மாநிலங்களின் அரசியலமைப்புச் சார்ந்த உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது.

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் மாநில அரசின் பங்கு குறைக்கப்படும் வகையிலான எந்த நடவடிக்கையும் கூட்டாட்சியின் மாண்புகளுக்கு எதிரானதாகும். உயர்கல்வி நிறுவனங்கள் அரசியல் மற்றும் அதிகார மோதல்களின் களமாக அல்லாமல், அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் கல்விச் சிறப்பை வளர்க்கும் சுயாட்சியான கல்வி மையங்களாகத் திகழ வேண்டும்.

துணைவேந்தர் நியமன நடைமுறை முழுமையாக வெளிப்படைத்தன்மை, தகுதி, கல்விசார் அனுபவம் மற்றும் நேர்மையின் அடிப்படையில் அமைய வேண்டும். எந்த ஒரு தரப்பிற்கும் அளவுக்கு மீறிய ஆதிக்கத்தை வழங்கும் நடைமுறைகள் உயர்கல்வியின் தரத்திற்கும், பல்கலைக்கழகங்களின் சுயாட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு மாநிலங்களின் உரிமைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை உறுதியாகப் பாதுகாக்கும் வகையில் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும். உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல; கல்விசார் சுதந்திரம், திறமை மற்றும் கூட்டாட்சிக் கொள்கையை மதிக்கும் அணுகுமுறையில்தான் பாதுகாக்கப்படும்.