விண்ணப்பங்களை வழங்க போதிய அவகாசம் உள்ளது எஸ்ஐஆர் படிவத்தில் குழப்பம் இல்லை: எடப்பாடி வக்காலத்து
ஓமலூர்: எஸ்ஐஆர் விண்ணப்பங்களை வழங்க போதிய அவகாசம் உள்ளது. அந்த படிவத்தில் எந்த குழப்பமும் இல்லை என்று எடப்பட்டி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சேலம் காமலாபுரம் விமானநிலையத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பீகார் சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளது. இதற்காக பிரதமருக்கும், கூட்டணி தலைவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்ஐஆர் குறித்து இந்தியா கூட்டணி கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்கள். பீகாரில் எஸ்ஐஆர் மூலம் உண்மையான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் பாஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 21 ஆண்டுகளாக எஸ்ஐஆர் பணிகள் நடக்கவில்லை. இதனால் இறந்தவர்களின் வாக்கும், இடம் பெயர்ந்தவர்களின் வாக்கும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. தற்ேபாது பிஎல்ஓ.,க்கள் விசாரிக்கும் போது, அதை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் சுணக்கமாக இருக்கிறது.
4ம் வகுப்பு படித்தவர்களையே பிஎல்ஓவாக நியமித்துள்ளனர். தகுதியில்லாதவர்களை இந்த பணிக்கு நியமிப்பதால் குளறுபடிகள் நடக்கிறது. எஸ்ஐஆர் படிவத்தில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் அதை பூர்த்தி செய்வதற்கு தகுதியான பிஎல்ஓ.,க்கள் இல்லை. இதனால் மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் எஸ்ஐஆர் படிவம் வழங்கப்படவில்லை. இதற்கு போதிய காலஅவகாசம் இல்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
தேர்தல் தேதி அறிவித்து 30 நாட்களுக்குள் வாக்குப்பதிவை நடத்தி முடிக்கும் அளவுக்கு அதிகாரிகளின் பணி உள்ளது. அப்படி இருக்கும் போது, 300 பேருக்கு ஒரு பிஎல்ஓ என்று நியமித்துள்ளனர். இவர்கள் தினமும் 50 வீடுகள் என்ற முறையில் படிவம் வழங்கினால் கூட, ஒரு வாரத்திற்குள் கொடுத்து முடிக்க முடியும். அதேபோல் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும்போது, அதற்கு 5நாட்கள் முன்புதான், வாக்காளர் அடையாள சீட்டு வழங்கப்படுகிறது.
இந்த வகையில் பார்த்தாலும் ஒரு மாதத்தில் எஸ்ஐஆர் படிவங்களை முழுமையாக வழங்க முடியும். எனவே, போதிய காலஅவகாசம் இல்லை என்பதை ஏற்க முடியாது. எஸ்ஐஆர் வருவதற்கு முன்பே இந்த குளறுபடியை சரி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பின்னர் நீதிமன்றத்திற்கு சென்றோம். எஸ்ஐஆர் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் முறைகேடுகள் தவிர்க்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
* அண்ணாமலை சொத்து குவிப்பு பதிலளிக்க மறுப்பு
‘நண்பரால் வீட்டு வாடகை கொடுக்கப்பட்ட அண்ணாமலை, கோடிக்கணக்கில் முதலீடு போட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறாரே? என்று நீங்கள் கேட்பது பத்திரிகை மற்றும் ஊடகங்களில் மட்டுமே வரும் செய்தி. அதைப்பற்றிய முழுவிபரம் எனக்கு ெதரியாது. எனவே, இதற்கு நான் பதில் அளிக்க முடியாது’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.