Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆப்பிள் அரசியல்

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த 3ம் தேதி புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்றார். காங்கிரஸ் கட்சி என்றாலே எந்த மாநிலமாக இருந்தாலும் சர்ச்சைக்கு குறைவிருக்காது. அதே போல கர்நாடக மாநில புதிய முதல்வர் டி.கே.சிவகுமார் அமைச்சரவையில் பரமேஸ்வர் துணை முதல்வராகவும் 12 பேர் அமைச்சர்களாகவும் முதல்கட்டமாக பொறுப்பேற்றனர். இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை டி.கே.சிவகுமார் ராஜினாமா செய்தார்.

அந்த பதவிக்கு பி.கே.ஹரிபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜ்யசபா சீட் வேண்டாம் என்று மறுத்துவிட்ட சித்தராமையாவுக்கு கட்சி மேலிடம் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி கொடுத்துள்ளது. மேலும் அவரது மகன் யதீந்திராவுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், டி.கே.சிவகுமார் அமைச்சரவையில் மேலும் 20 இடங்கள் வரை காலியாக உள்ளது.

அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கம் ராஜ்யசபா தேர்தலுக்கு பிறகு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அமைச்சரவையில் இடம்பிடிக்க மூத்த எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மேலிடத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களை வைத்து லாபி நடத்தி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீட்டை மேலிட ஒப்புதலுடன் டி.கே.சிவகுமார் வழங்கினார். இதில் குறிப்பாக பெங்களூரு வளர்ச்சி துறையை பிடிக்க சில அமைச்சர்கள் போட்டி போட்டனர்.

மூத்த எம்எல்ஏவான ராமலிங்கரெட்டிக்கு அந்ததுறையை ஒதுக்குவதாக டி.கே.சிவகுமார் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் சொன்னபடி அவருக்கு அந்ததுறை ஒதுக்கப்படாமல் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராமலிங்கரெட்டி பதவியேற்ற இரண்டே நாளில் ராஜினாமா செய்தார். ராமலிங்கரெட்டியின் ராஜினமாவை தொடர்ந்து மேலும் சில அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கிய துறையில் திருப்தி இல்லை என்று பேசத்தொடங்கினர்.

மேலும் துணை முதல்வராக பொறுப்பேற்ற பரமேஸ்வர், முந்தைய சித்தராமையா ஆட்சியில் தான் வகித்து வந்த உள்துறையை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.அந்த துறை தற்போது மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியாங்்க் கார்கே வசம் உள்ளது. அதே ேபால் மூத்த எம்எல்ஏவான கே.எச். முனியப்பா தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் திருப்தி அளிக்கவில்லை என்று போர்க்கொடி தூக்கினார். உடனே பெங்களூரு விமான நிலையத்துக்கு அவரை வரவழைத்த ராகுல்காந்தி 40 நிமிடம் பேச்சுவார்த்ைத நடத்தி சமாதானப்படுத்தினார்.

அதேபோன்று ராமலிங்கரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ராஜினாமாவை திரும்ப பெற வைத்தனர். இப்படி ஆரம்பமே அலைகழிப்பா இருக்கே என்ற பாணியில் புதிய முதல்வர் டி.கே.சிவகுமார் அங்கலாய்த்துக்கொண்டுள்ளார்.  அமைச்சரவை விவகாரம் இப்படி இருக்க தனது சொந்த தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க கனகபுரா சென்ற முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தொண்டர்கள் ஆளுயர ஆப்பிள் மாலை அணிவித்தனர். அதில் இரண்டொரு ஆப்பிளை எடுத்து பாதி கடித்து தொண்டர்களுக்கு டி.கே.சிவகுமார் தூக்கி வீசினார்.

இது சர்ச்சையை எழுப்பியுள்ளது. டி.கே.சிவகுமார் தன்னை ராமாயணத்தில் வரும் சபரி போன்று நினைத்துகொண்டுள்ளார் என்று பாஜ விமர்சித்துள்ளது. கனகபுரா, சென்னபட்டணா ஆகிய தொகுதிகளில் குமாரசாமிக்கும் செல்வாக்கு இருக்கிறது. இதையடுத்து டி.கே.சிவகுமாரின் செயல் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது என்று கூறும் அக்கட்சியினர் ஆப்பிள் அரசியல் 2028 சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்படும் என்று விமர்சித்துள்ளனர்.