Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் இணைப்பு பெற மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக தயாரித்து கட்டிட அனுமதி: கட்டிட நிறுவனம் மீது போலீசில் புகார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி முன்னாள் ஆணையர் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மின் இணைப்பு பெற்ற கட்டிட நிறுவனத்தின் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சியில் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஆணையராக பணிபுரிந்து வந்த அழகுமீனா, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு பெற்று சென்றார். தற்போது, புதிய ஆணையராக பாலச்சந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பல்லாவரம், பிள்ளையார் கோயில் தெருவில் இயங்கி வரும் ராஜீ, குமார் ஆகியோருக்கு சொந்தமான ஏ.கே.பில்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில், தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலம், 46வது வார்டு சேலையூர் புத்தர் தெருவில் விதிமீறி 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

அந்த, கட்டிடத்திற்கு முன்னாள் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா கையெழுத்திட்டதுபோல், போலியாக கையெழுத்து போட்டு மாநகராட்சியின் முத்திரையை பயன்படுத்தி கட்டிட அனுமதி சான்று தயார் செய்து அந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு பெற்றுள்ளனர். அவ்வாறு, பெற்ற மின் இணைப்புக்காக அந்த கட்டிடத்தின் அருகில் மின்வாரியம் சார்பில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த, கட்டிடத்திற்கு எப்படி மின் இணைப்பு வழங்கப்பட்டது என கட்டிடத்தின் அருகே வசித்து வரும் கோபால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலையூர் மின்வாரிய அலுவலகத்திற்கு விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். அதற்கு தாம்பரம் மாநகராட்சி சார்பில் கட்டிட அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே மின் இணைப்பு வழங்கப்பட்டதாக மின் வாரியம் சார்பில் விளக்க கடிதம் மற்றும் கட்டிட அனுமதி சான்று நகலை கோபாலுக்கு அனுப்பியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கட்டிட வரைப்படம்படி அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாமல் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்க அந்த கட்டிடத்திற்கு எப்படி தாம்பரம் மாநகராட்சி அனுமதி சான்றிதழ் வழங்கியது என மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு கோபால் கடிதம் அனுப்பி உள்ளார். அப்போது, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பார்த்தபோதுதான் முன்னாள் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா 1 கையெழுத்து போலியாக போடப்பட்டு கட்டிட அனுமதி சான்று தயார் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சிடைந்த முன்னாள் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தனது கையெழுத்தை போலியாக போட்டு கட்டிட அனுமதி சான்றிதழ் தயாரித்து மின் இணைப்பு பெற்றதாக சம்பந்தப்பட்ட ஏ.கே.பில்டர்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையர் பாலச்சந்தர் கூறுகையில், ‘‘இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த புகார் தொடர்பாக எனது கவனத்திற்கு வந்தது. இதுகுறித்து ஏற்கனவே முன்னாள் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாநகராட்சி சார்பில் மின்வாரியத்திற்கு கடிதம் ஒன்று வழங்கியுள்ளோம். அதில், அந்த குறிப்பிட்ட கட்டிடத்திற்கு போலி கட்டிட அனுமதி சான்று வழங்கப்பட்டதால் தான் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்றால் அந்த கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம். காவல்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது கூடிய விரைவில் அதிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதுமட்டுமின்றி மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளரை சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு நேரில் சென்று, அதில் விதிமீறல்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதற்குண்டான நடவடிக்கையை எடுப்பதற்கு அறிவுறுத்தி உள்ளேன்.இந்த, போலி கையெழுத்து முறைகேடில் மாநகராட்சி ஊழியர்கள் யாரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும் இதற்கென ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து உள்ளேன். அப்படி, ஏதாவது தவறு இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்றார்.