Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குறிப்பிட்ட சமூகம் குறித்த சர்ச்சை கருத்து; பாலிவுட் இயக்குனர் அனுராக்குக்கு பிடிவாரண்ட்: சூரத் நீதிமன்றம் அதிரடி

சூரத்: குறிப்பிட்ட சமூகம் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட வழக்கில் ஆஜராகாத பாலிவுட் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு சூரத் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘பூலே’ திரைப்பட முன்னோட்ட சர்ச்சை தொடர்பாக, சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட சமூகம் குறித்து இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் (54) ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்டார்.

இணைய பயனாளியின் கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அந்த ஜாதியில் (குறிப்பிட்ட சமூகம்) இருந்து நீங்கள் என்ன சாதித்துவிட்டீர்கள்?’ என்று பேசியது இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி விஷ்வ இந்து பரிஷத் வழக்கறிஞர் கமலேஷ் ராவல் புகார் அளித்தார். இதையடுத்து அமைதியை சீர்குலைத்தல் மற்றும் தவறான வதந்திகளை பரப்புதல் உள்ளிட்ட பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் காஷ்யப் மீது சூரத் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் தனது தவறை உணர்ந்து சமூக வலைதளத்தில் அவர் பகிரங்க மன்னிப்பு கோரிய போதிலும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் நாளிதழில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டும் அனுராக் காஷ்யப் நீதிமன்றத்தை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால், கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் ஜே.வி.சவுகான் அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.