இரவுநேர பாராக செயல்படும் அவலம் சமூக விரோதிகளின் பிடியில் அரசு பேருந்துகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தவளக்குப்பம்: புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் அரசு படகு குழாமில் 7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் சுற்றுலா சொகுசு பேருந்து சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இரண்டு சுற்றுலா சொகுசு மினி பேருந்துகள் நோணாங்குப்பம் அரசு படகு குழாமில் உள்ள கார் பார்க்கிங் இடத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏசி, புஸ்பேக் சீட் என அதி நவீன வசதிகள் கொண்ட இந்த மினி பேருந்து சுற்றுலா பயணிகள் பதிவு செய்வதன் அடிப்படையில் கேரளா, ஆந்திரா (திருப்பதி), கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வந்தது.இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேருந்து, இயக்கப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பேருந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. பேருந்துகள் முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் காண்டம் பாக்கெட்டுகள் நிறைந்து காணப்படுகிறது.
வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடத்தில், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக பேருந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே புதுச்சேரி அரசு பராமரிப்பின்றி பழுதாகியுள்ள 2 பேருந்துகளையும் அந்த இடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதோடு சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
