தமிழகத்தில் இரண்டு விதமான அரசியல் போக்கை தவெக அரசு கடைபிடித்து வருகிறது. ஒன்று, பிற கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு தூது விட்டு தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வது; மற்றொன்று, அவதூறு பேச்சு என்ற பெயரில் ஏகப்பட்ட பிரிவுகளில் கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள் மீது அவதூறு வழக்கு பதிந்து சிறைப்படுத்த எண்ணுவது; இரண்டுமே அரசியலில் ஜனநாயக விரோத போக்கு ஆகும்.
அந்த வகையில் திமுக எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும், இவ்வாறாக வழக்கு தொடரப்பட்டது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் மீது, 9 பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவசர அவசரமாக கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இன்று சட்டமன்ற தொடர் நடக்க உள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதம்; ஆளுங்கட்சியின் அராஜக நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கைதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடந்தது. பொதுவாக, இதுபோன்ற அவதூறு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் அரசுகளுக்கும், காவல்துறைக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக குரல்களை முடக்கும் வகையில் கைது நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என தெளிவுபட கூறியுள்ளது. அந்த வகையில் திடீரென 9 பிரிவுகளில் வழக்கு பதிந்து, அதிகாலையிலே உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த ஐகோர்ட், உதயநிதி ஸ்டாலினை இன்றே (நேற்று) ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. இது தவெக அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை பங்கேற்க வைக்கக்கூடாது என்ற எண்ணத்திலேயே, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதப்போக்கு மற்றும் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் நடவடிக்கை என அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
‘வாயிலே நல்லா வருது’, ‘நான் என்ன கவர்ச்சி......’ என ஒரு முதல்வராக இருந்தும், பொதுமேடையில் விஜய் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். மதிப்புமிக்க சட்டப்பேரவையில் சினிமாத்தனமான சைகை செய்கிறார்.
தேர்தலுக்கு முன், பின் அவரது பேச்சுகள் உயர்தரத்தில் இல்லை என்ற வாதம் பொதுவாக பலரிடம் உள்ளது. அதிகாரிகளை, சொந்த கட்சியினரையே மிக மோசமாக ஒரு பெண் அமைச்சர் நேரடியாகவும், செல்போனில் திட்டும் ஆடியோவும் வைரலானது. அப்படிப்பட்ட நிலையில், ஒரு அரசியல் கட்சியில் முன் வைக்கப்படும் விமர்சனத்துக்கு சரியான முறையில் பதிலளிப்பது மற்றும் கண்டனங்களை பதிவு செய்வது மட்டுமே ஜனநாயகத்தை கடைபிடிக்கும் நடவடிக்கையாகும். அதை தவிர்த்து சிறை நடவடிக்கை என்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நேரடி மிரட்டல் என்றே எடுத்துக் கொள்ளப்படும். இனியாவது, இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தாமல், தமிழக மக்கள் முன் வைக்கும் பிரச்னைகளை தீர்ப்பதில் தவெக அரசு அக்கறை காட்ட வேண்டும்.


