Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் தேரோட்டம்!

ஈரோடு: அந்தியூரில் உள்ள புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் அமைந்துள்ள குருநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் தென்னிந்திய அளவிலான குதிரைச் சந்தையும் மிகவும் புகழ்பெற்றவை.

இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த ஜூலை 22-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முக்கிய தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

புதுப்பாளையம் கோயில் மடப்பள்ளியில் இருந்து வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்ட வேங்கை மரத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. பின்னர், மூங்கிலால் செய்யப்பட்ட சுமார் 60 அடி உயரம் கொண்ட மகாமேரு தேரில் சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டார். இதையடுத்து, பக்தர்கள் பரவசத்துடன் தேரைச் சுமந்து சென்றனர்.

முன்னதாக காமாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருள, அதனைத் தொடர்ந்து இரண்டு தேர்களில் பெருமாள் மற்றும் குருநாதசுவாமி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

புதுப்பாளையம் கோயிலில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் வனக்கோயில் அமைந்துள்ளது. அந்த வனக்கோயில் வரை தேரோட்டம் நடைபெறுகிறது. வனப்பகுதியை அடைந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. மேலும், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை வனக்கோயிலுக்குச் சென்ற சுவாமி மீண்டும் மடப்பள்ளிக்கு அழைத்து வரப்படுகிறார். பின்னர், அடுத்த நான்கு நாட்களுக்கு கோயிலில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார்.

இந்தத் தேரோட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, கோயில் திருவிழாவையொட்டி நடைபெறும் புகழ்பெற்ற குதிரைச் சந்தையிலும் ஏராளமான குதிரைகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன.