Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீண்டும் குளறுபடியா?

ஒரு நீட் தேர்வை முறைப்படி நடத்த முடியாமல் தவிக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. நீட் அடிப்படையில் தான் நாடு முழுவதும் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் நிரப்பப்பட வேண்டும் என்று கண்டிப்பாக உத்தரவிட்ட பிறகு இப்போது நீட் தேர்வுத்தாள் வெளியாகி இருப்பது 3வது முறை. தடுக்க வழி தெரியாமல் தேர்வு நடத்த ராணுவத்தை களம் இறக்கியிருக்கிறது மோடி அரசு. வேறு வழியில்லை. அவர்களுக்கு தெரிந்த வழி முறை அது ஒன்று தான்.

நாடு முழுவதும் மே 3 அன்று நடந்த நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதால் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு வரும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. இந்த மறுதேர்வுக்கான வினாத்தாளை டெலிகிராம் சேனல்கள் மூலம் வழங்குவதாகக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் தற்போது பல மாணவர்களிடம் ரூ.1.50 கோடி வரை வசூலித்து உள்ளது தெரிய வந்துள்ளது. பிரைவேட் மபியா என்ற பெயரில் எட்டு டெலிகிராம் சேனல்களை உருவாக்கி, நீட் மறுதேர்வு வினாத்தாள்கள் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளனர். இது தொடர்பாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுமர் சிங் மீனா மற்றும் கோட்டாவைச் சேர்ந்த ஆகாஷ் மீனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் மறுதேர்வு வினாத்தாள் தருவதாக வெளியான அறிவிப்பால் மோடி அரசு அதிர்ந்து போய் நிற்கிறது. ஒரு தேர்வு கூட உருப்படியாக நடத்த முடியவில்லையா என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தத்தளிக்கிறது. எனவே நீட் மறு தேர்வை நடத்த ராணுவம், மத்திய படைகள், சைபர் பாதுகாப்பு படைகள், ரயில்வே துறை ஆகியவை களம் இறக்கப்பட்டுள்ளன. நீட் மறு தேர்வு வினாத்தாள்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய உள்துறைச் செயலாளர் வரை தலையிட வேண்டிய நிர்பந்தத்தில் நமது ஒன்றிய கல்வித்துறையின் லட்சணம் உள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஈடுபடுத்தப்பட உள்ளது. மறுதேர்வு வினாத்தாள் இணையத்தில் வேகமாகப் பரவுவதை தடுக்க சமூக ஊடகத் தளங்கள் மற்றும் டிஜிட்டல் வழித்தடங்களை கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு முன்னதாக இந்தியாவில் டெலிகிராம் தடை செய்யப்பட்டது. தேசியத் தேர்வு முகமையின் பரிந்துரையின் பேரில் மோடி அரசு டெலிகிராம் செயலியைத் தடை செய்தது. ஜூன் 22ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படாது.

நீட் மறுதேர்வு வினாத்தாள்கள் விநியோகம் உள்ளிட்ட மோசடி குழுக்களுக்கு டெலிகிராம் ஒரு முக்கிய தளமாக திகழ்கிறது. இதற்கு காரணம் டெலிகிராம் சேனலை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. மொத்தத்தில் நீட் மறுதேர்வை எப்படியாவது சிக்கல் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் மோடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இந்த விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவரை மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இன்றைய இளம் தலைமுறை மத்தியில் மோடி அரசுக்கு எதிரான தீ வேகமாக பரவி வருகிறது. அதை அணைக்க வழி தெரியாமல் தவித்து வருகிறது. மோடி அரசு.