8 கிராம் தங்கம்; பட்டுப்புடவை - அண்ணன் சீர் திட்டத்தால் திருமணமாகும் எல்லா பெண்களுக்கும் பலன் கிடைக்குமா?
சென்னை: தவெக அரசு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் திருமண நாளன்று அண்ணன் சீர் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. ஆனால் இதற்கான நிதியாக வெறும் 812 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனென்றால் இன்று தங்கம் விற்கும் விலைக்கும், ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வமாக பதிவாகும் திருமணங்களின் எண்ணிக்கையும் கணக்கிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவில் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது.
சரி, தோராய கணக்கீட்டை பார்ப்போம்... தமிழகதில் ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் திருமணங்கள் சுமார் 5.5 லட்சம் முதல் 6.5 லட்சம். நாம் சராசரியாக 6 லட்சம் திருமணங்கள் என்று கணக்கில் எடுத்துக்கொள்வோம். இன்று 8 கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலை சுமார் ரூ.1,06,000. இது நமக்கு கிடைக்கும் விலை, அரசு மொத்தமாக கொள்முதல் செய்தால் கூட 8 கிராம் 80 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்து கிடைக்க வாய்ப்பு குறைவு. அதே போல நல்ல தரமான ஒரு பட்டு புடவையின் ஆரம்ப விலை சுமார் ரூ.5,000-ஆக இருக்கும். இந்த விலையில் வாங்கினால் மட்டுமே பட்டுப்புடவை என்ற பெயருக்கு ஏற்ப அந்த புடவையும் இருக்கும் என்பது அனைத்து பெண்களும் அறிந்ததே.
இந்த கணக்கின்படி பார்த்தால் திருமணமாகும் ஒரு பெண்ணுக்கு முதல்வர் விஜய், அண்ணனாக மாறி சீர் செய்ய குறைந்தபட்சம் ரூ.85,000 ஆகும். நாம் முன்பு குறிப்பிட்டபடி ஓராண்டில் சுமார் 6 லட்சம் பெண்களுக்கு திருமணம் என்றால் கூட அவர்களுக்கு தலா ரூ.85,000 செலவு செய்ய வேண்டுமென்றால் கூட (6,00,000 × ரூ.85,000) மொத்தமாக ரூ.5,100 கோடி தேவை. அதாவது ஓராண்டில் திருமணமாகும் அனைத்து பெண்களுக்கும் 8 கிராம் தங்கமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்க வேண்டுமெனில், சுமார் ரூ.5,100 கோடி தேவைப்படும். ஆனால் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியோ வெறும் 812 கோடி. மேற்கண்ட கணக்கீட்டின் படி பார்த்தால் ஒரு லட்சத்திற்கும் குறைவான பெண்களுக்கு தான் இந்த நிதியை வைத்து அண்ணன் சீர்வரிசை கொடுக்க முடியும்.
எனவே யார் யார் இந்த திட்டத்தில் பலன் அடைவார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு, வரைமுறை இருக்கிறது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் அதுவும் குறிப்பாக திருமணம் செய்து கொள்ளும் முதல்வரின் தங்கைகள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் தான் ஏற்படும்.. தங்களின் பாசமிகு அண்ணனின் சீர்வரிசை தங்களுக்கு கிடைக்கும் என வாக்களித்த பல லட்சக்கணக்கான பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாத சூழல் வந்தால்..! என்ன ஆகும்?


