Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாமானிய மக்களின் கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர் அறிஞர் அண்ணா : கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி!

சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி அண்ணா -கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "திராவிட இயக்கத்தின் கொள்கைப் பெருஞ்சுடராக, தமிழர் மொழி - உரிமை- இனமானம் மீட்டு தந்த தகத்தகாய சூரியன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாள் இன்று. தமிழ்நாட்டின் தடம் மாற்றிய தன்னிகரற்றத் தலைவரான அவர் காட்டிய சமூகநீதிப் பாதையில் வீறுகொண்டு நடைபோடுவோம். மாநில உரிமைகளைக் காத்து நிற்போம்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு நாள் இன்று! தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டியெழுப்பி, சாமானிய மக்களின் கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர்.

தமிழ் உணர்வு - மாநில உரிமைகள் - சமூகநீதி ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கி - ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தவர்.இந்தித் திணிப்புக்கு எதிராக அண்ணா மூட்டிய தீ இன்றும் பரவுகிறது! பாசிஸ்ட்டுகளை பதற வைக்கின்ற அச்சத்தின் வழியே தமிழ்நாட்டை இன்றும் அண்ணாவே ஆள்கிறார்.

பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடைபோடும், நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் தலைமையில், மீண்டும் கழக அரசை அமைத்திடவும் - தமிழ்நாட்டை பாதுகாத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.