Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு பிடி இறுகுகிறது; ரூ.1.78 லட்சம் கோடி நிதி மோசடி வழக்கை விசாரிக்க ‘சிறப்பு புலன் விசாரணை குழு’: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானி தொடர்புடைய ரூ.1.78 லட்சம் கோடி மதிப்பிலான மெகா நிதி மோசடி புகாரை விசாரிக்க சிறப்பு புலன் விசாரணை குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் யெஸ் வங்கி ரூ.2,965 கோடி முதலீடு செய்திருந்தது. இந்தத் தொகை பின்னர் வாராக் கடனாக அறிவிக்கப்பட்ட நிலையில், யெஸ் வங்கி மூலமாக சுமார் ரூ.11,000 கோடி பொதுப்பணம் அனில் அம்பானி குழும நிதி நிறுவனங்களுக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும், 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.40,185 கோடி கடன் பெற்று முறைகேடு செய்ததாகக் கூறி, அவருக்குச் சொந்தமான ரூ.8,997 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீண்டும் முடக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக அனில் அம்பானி மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்த நிலையில், இது குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மெகா ஊழல் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தடயவியல் தணிக்கையில் நிதி மோசடி நடந்தது உறுதியாகியுள்ளது என்றும், இதில் சுமார் ரூ.1.78 லட்சம் கோடி முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது’ என்றும் தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘இது மிகப்பெரிய நிறுவன மோசடி’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றிச் செயல்பட வேண்டும் என்றும்,

உண்மைகளைக் கண்டறிய அமலாக்கத்துறையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய ‘சிறப்பு புலன் விசாரணை குழுவை’ அமைக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும், இந்தச் சதி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அடுத்த நான்கு வாரங்களில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.