நாளை மறுநாள் ஆஜராக அனில் அம்பானிக்கு ஈடி சம்மன்
புதுடெல்லி: பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.7500கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் முடக்கினார்கள். இந்நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் மீதான சோதனையின்போது நெடுஞ்சாலை திட்டத்துக்கு ரூ.40கோடி மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. சூரத்தில் இயங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக துபாய்க்கு நிதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் ரூ.600கோடிக்கும் மேல் சர்வதேச ஹவாலா வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹவாலா வியாபாரிகள் உட்பட பல்வேறு நபர்களின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் குழும உரிமையாளர் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. அனில் அம்பானி ஆஜராக கோரி அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நேற்று அவர் நேரில் ஆஜராக வேண்டிய நிலையில், வீடியோகான்பரன்ஸ் மூலமாக தான் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு தருவதாகவும் கூறி அமலாக்கத்துறைக்கு அனில் அம்பானி கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த கடிதத்தை நிராகரித்துவிட்டனர். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது 17ம் தேதி அனில் அம்பானி நேரில் ஆஜராகும்படி மீண்டும் நோட்டிஸ் அனுப்பப்பட்டு உள்ளது.