திருமலை: ஆந்திராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் 13 மாநகராட்சிகள், 87 நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் உள்ளது. இதில் 8 நகராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 79 நகராட்சி, 13 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 1ம் தேதி நடந்தது. மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.
முன்னதாக 13 மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு 153 பேர், 79 நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு 367 பேர் என மொத்தம் 520 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் நகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பாலான நகராட்சி, திருப்பதி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டம், குப்பத்தில் தெலுங்கு தேசம் கட்சி முழுமையான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குப்பம் நகராட்சித் தேர்தலில், 32 வார்டுகளிலும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குப்பத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வார்டு கூட வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
* ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற 96 கவுன்சிலர் இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மண்டபேட்டில், 36 வார்டுகளில் 36 இடங்களிலும் தெலுங்கு தேசம் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கோவூரில், 28 வார்டுகளில் 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நிடதவோலுவில் உள்ள 32 வார்டுகளில் ஜனசேனா 14 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 13 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.


