*தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு
திருமலை : ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள நோவாடெல்லில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியா- ஐரோப்பா வணிக கூட்டாண்மை வட்ட மேசைக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:
விசாகப்பட்டினம் ஒரு அற்புதமான கடலோர நகரம். இப்பகுதியில் நல்ல வளங்கள் உள்ளன. அமெரிக்காவிற்கு வெளியில், மிகப்பெரிய ஏ.ஐ. தரவு மையத்தை விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் அமைத்து வருகிறது. இப்பகுதியில் இருந்து கடலுக்கு அடியில் கேபிள் இணைப்பும் அமைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் வந்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது. வாழ்க்கைத் தரம் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப செல்வம் அதிகரிக்க வேண்டும். இதற்காக, ஆந்திராவில் பல்வேறு வகையான தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அமராவதியில் முதல் குவாண்டம் வேலி அமைக்கப்பட உள்ளது. டிரோன்களும் பெரிய அளவில் பயன்படுத்தப்படும். சிவில் பயன்பாடுகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அதனால்தான் ஆந்திராவில் டிரோன் நகரத்தை அமைத்து அவற்றை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளி பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் ஒரு விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்போது பசுமை ஆற்றலின் முக்கியத்துவமும் கணிசமாக அதிகரித்துள்ளது.ஆந்திராவில் பெரிய அளவிலான துறைமுகங்களை கட்டி வருகிறோம். பசுமை எரிசக்தி துறையில் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதில் 160 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளோம். வணிகம் செய்வதற்கான வேகக் கொள்கையை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருகிறோம். எனவே ஆந்திராவில் முதலீடு செய்யுங்கள், அனுமதிகளில் எந்த தாமதமும் இருக்காது, 45 நாட்களுக்குள் அனுமதிகள் வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்திக்கு வேகமாக ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் ேபசினார்.
