திருமலை, நவ.3: ஆந்திர மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக 13 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆந்திர மாநிலத்தில் 13 மாநகராட்சி, 79 நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவின்போது, பல வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள், வன்முறை சம்பவம் நடந்ததாக மாநில தேர்தல் ஆணையருக்கு புகார்கள் வந்தது. அதனை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
விசாரணையில், பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, கலெக்டர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து முறைகேடு நடந்த மாநிலம் முழுவதும் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று காலை 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. அனந்தபுரம் மாநகராட்சி, திருப்பதி மாநகராட்சி, கடப்பா மாநகராட்சி, மாச்செர்லா, பிரகாசம் மாவட்டத்தின் சிமாகுர்த்தி, ஜம்மலமடுகு, புலிவெந்துலா உள்ளிட்ட இடங்களில் மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.


