Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தொழில் துறையின் காந்தமாக மாறுகிறது ஆந்திரா பரந்தூரைக் கைவிட்டதால் பறந்து போகும் திட்டங்கள்: நம்பர் 1 இடத்தை தக்க வைக்குமா தமிழ்நாடு?

நடப்பு நிதியாண்டில் நாட்டில் அறிவிக்கப்பட்ட மொத்த முதலீடுகளில் ஏறக்குறைய 25 சதவீதத்தை ஈர்த்திருக்கிறது ஆந்திர பிரதேசம். புதிய விமான நிலையங்கள், துறைமுகங்கள் என தொழில் வாய்ப்புகளுக்கான உள்கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொண்டே வருகிறது இந்த மாநிலம். சமீபத்தில், ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் ரூ.17,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதில் ஒன்று, அல்லூரி சீதாராம ராஜூ சர்வதேச விமான நிலையம். இது ஒடிசா மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்தும் பயணிகளை, முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய உத்தியாக இது கருதப்படுகிறது.

இதுபோன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் கைமேல் பலனை கண்டிருக்கிறது ஆந்திரா. சமீபத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சுமார் ரூ.23 லட்சம் கோடி முதலீட்டை இந்த மாநிலம் ஈர்த்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் ஏறக்குறைய 800 நிறுவனங்கள் இந்தமாநிலத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றன. ரூ.21.6 லட்சம் கோடி முதலீடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி விட்டன. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்று 36 நாட்களிலேயே ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியில் ஏஎம்சிஏ திட்டத்துக்கான விமான ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம் அமைக்கப்பட்டது.

போர் விமானங்களை அசெம்பிள் செய்வது மற்றும் சோதனை நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படும். கையெழுத்தான ஒப்பந்தங்களில் ஏறக்குறைய 60 சதவீத திட்டங்களில் விரிவான திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அதனை செயல்படுத்துவதற்கான பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. மிகப்பெரிய முதலீடுகளை பொறுத்தவரை, கூகுள் நிறுவனம் ஏஐ மையம் அமைப்பதற்காக, 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1.35 லட்சம் கோடியை முதலீடுசெய்ய உள்ளது. விசாகப்பட்டினம் அருகே 601 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்டம் அமைகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.50,000 கோடி முதலீடு செய்கிறது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு இது.

ஆந்திராவை நாட்டின் முன்னணி முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தீவிர நடவடிகைகளின் ஒரு பகுதியாக மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியமான எஸ்ஐபிபி மூலம் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு விரைவான ஒப்புதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூலை மாதம் வரை மொத்தம் 19 மாநில முதலீட்டு மேம்பாட்டு வாரிய கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்தக் கூட்டங்களில் மூலம் மட்டும் சுமார் 260 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, ரூ.9.35 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மூலம் 8.69 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. இதில் கடந்த ஏப்ரல் 2026 நிலவரப்படி 260 திட்டங்களுக்கு ரூ.9.26 லட்சம் கோடி முதலீடு ஒப்புதல் பெற்றிருந்த நிலையில், அதன் பின்னர் மே, ஜூன் மற்றும் ஜூலை கூட்டங்களில் மேலும் முதலீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் எஸ்ஐபி வாரியம் 50 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் தொழில்துறை உற்பத்தி, பசுமை எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் ரூ.30,515 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகின. ஜூலையில் ஹீரோ ேமாட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி உள்ளிட்டவற்றுக்காக ரூ.3,200 கோடிக்கும் மேல் முதலீடு செய்கிறது. இவற்றின் மூலம் ஏறக்குறைய 34,000 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதுபோல் ஏஎஸ்ஐபி டெக்னாலஜீஸ் நிறுவனம் செமி கண்டக்டர் ஆலையை விசாகபட்டினத்தில் அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பம், மின்னணு உற்பத்தி, செமிகண்டக்டர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், உணவுப் பதப்படுத்தல், துறைமுகங்கள், போக்குவரத்து மேலாண்மை, சுற்றுலா மற்றும் உற்பத்தித் தொழில் போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகம் ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக கூகுள், ரிலையன்ஸ், அதானி குழுமங்கள், டாடா குழும நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. விசாகபட்டினம் துறைமுக மேம்பாடு இதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று. 2 ஆண்டு முன்பு விசாகபட்டினம் சாதாரண துறைமுக நகரம் தான். இது இன்று இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு மையமாக மாறியுள்ளது.

அதனால்தான் மொத்த முதலீட்டில் வெறும் 18 மாதங்களில் மட்டும் ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இது காரணமாக அமைந்துள்ளது. அதானி, அம்பானி நிறுவனங்கள் போட்டி போட்டு முதலீடு செய்ய முன்வரும் களமாக இதனை ஆந்திரா மாற்றி அமைத்திருக்கிறது. விசாகபட்டினம் உலக நாடுகளுடன் கடல் வழி இன்டர்நெட் கேபிள்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெங்களூரு, மும்பையுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய நிலப்பரப்பு உள்ளது. 15 நாளில் ஒப்புதல், 30 ஆண்டு வரி விடுமுறை அளிக்கிறது. முதலீடுகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், ஒப்புதல் பெற்ற திட்டங்கள் விரைவாக செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதிலும் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கான படிக்கற்கள் இவை.

இப்படி, ஆந்திர மாநிலம் பல்வேறு தரப்புகளில் இருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவதற்கு காரணம், உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தான். அதிலும் குறிப்பாக சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் புதிய துறைமுகங்கள் உருவாக்கங்கள் முதலீட்டு ஈர்ப்புக்கு பெரும் பங்கு வகித்துள்ளன. ஏற்கெனவே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் அதிக தொழில் முதலீட்டை ஈர்த்தன. கொரோனா பாதிப்பு இருந்த சவாலான காலத்தில் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த பல திட்டங்களை செயல்படுத்தினார்.

இதில் மிக முக்கியமானது உள்கட்டமைப்பு மேம்பாடுகள் தான். இதன் பலனாகவும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொண்ட முயற்சிகளாலும் 5 ஆண்டில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.12.37 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன்மூலம் 36.52 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதில் 73 சதவீத ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் திமுக ஆட்சி முடிவதற்கு முன்பாகவே ஏறக்குறைய 74 சதவீதம் அளவுக்கு முடிந்து விட்டன. 35 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான நிதி ஆயோக் அறிக்கையில் ஒட்டு மொத்த அளவில் டாப் 5 மாநிலங்களிலும், பெரிய மாநிலங்களில் டாப் 5 மாநிலங்களிலும் 3வது இடத்தை தமிழ்நாடு பிடித்தது. உள்கட்டமைப்பு, வணிக சூழல், வளங்கள், அரசு கொள்கைகள், ஒழுங்குமுறை எளிமை, நிறுவன சூழல், நிதி நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மீள் திறன் என அனைத்தும் தேசிய சராசரிக்கும் மேல் இருந்தது முதலீடுகளை ஈர்க்க காரணமாக அமைந்தது. இதனால் வடமாநிலங்களுடனான இடைவெளியும் குறைந்து விட்டது. உள்கட்டமைப்பில் நம்பர் ஒன் மாநிலம் என்ற அந்தஸ்தை பிடித்தது.

தற்போதைய தவெக அரசின் சில முடிவுகள், நிலைப்பாடுகள் காரணமாக, இந்த நம்பர் ஒன் அந்தஸ்து தக்கவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதில் மிக முக்கியமான முடிவு, பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவது தான் என்கின்றனர் தொழில்துறையினர். குறிப்பாக மஜ்காவ் டாக் கப்பல் கட்டும் திட்டம் தூத்துக்குடியில் அமைக்க இருந்தது எனவும், பின்னர் ஆந்திராவில் முதலீடு செய்ய நிறுவனம் முன்வந்தது. நில ஒதுக்கீடு மற்றும் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக திட்டம் நகர்ந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆந்திரா முதலீடுகளை அசுர வேகத்தில் ஈர்க்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை கொண்டுவர விமான நிலைய மேம்பாடு மிகவும் அவசியம். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால், சென்னை விமான நிலையத்தில் இப்போதுள்ள நெருக்கடி மேலும் அதிகமாகும். உள்ளூர் விமானங்கள் சில ரத்தாவது போல் சர்வதேச விமான போக்குவரத்து இணைப்பும் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. தகவல் தொழில்நுட்பம், மின்னணு, சுற்றுலா, உற்பத்தித்துறை முதலீடுகள் பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் முதலீடுக்கு சாதகமான சூழல் மாறிவிடும். இங்கு வர வேண்டிய முதலீடுகள் பெங்களூரு, ஐதராபாத், விசாகபட்டினத்துக்கு மாறக்கூடும் இதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு முடிவுகளை எடுக்க வேண்டும். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கூடாது என தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர்.

* தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா உட்பட எல்லை மாநிலங்களின் முதலீடுகளை ‘வளைக்கும்’ விமான நிலையங்கள்

ஸ்ரீபெரும்புதூர் முதல் கர்நாடக மாநிலம் ஹோஸ்கோடே வரையிலான 258 கி.மீ நீள பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை தமிழ்நாட்டின் பரந்தூர் விமான நிலைய திட்டத்துடன் இணைக்கும் வகையில் உள்ளது. ஏறக்குறைய முடியும் தருவாயி்ல உள்ள திட்டத்தை நிறுத்துவதால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி முடக்குவதற்கு காரணமாகி விடும். மாறாக, ஆந்திராவில் 9 விமான நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இவற்றில் பல மாநில எல்லையில் அதாவது, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா அருகில் அமைந்துள்ளன. இதன் மூலம் இந்த மாநிலங்களின் தொழில் முதலீடுகளும், பயணிகள் மூலமான வருவாயும் ஆந்திராவுக்கு மாறும் அபாயம் உள்ளது.

* குப்பம் விமான நிலையம்

குப்பம் விமான நிலையம் உருவானால் தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் தடுக்கப்பட்டு ஆந்திராவுக்கு செல்லும் அபாயம் உள்ளது. பரந்தூர் விமான நிலையத்துக்கும் குப்பம் விமான நிலையத்துக்கும் இடையிலான தொலைவு சுமார் 150 கி.மீ முதல் 170 கி.மீ. வேலூரிலிருந்து முன்மொழியப்பட்ட குப்பம் விமான நிலையம் சுமார் 80 கி.மீ முதல் 100 கி.மீ. இதே தூரம் தான் பரந்தூருக்கும் வேலூருக்கும் உள்ளது. 2 விமான நிலையங்களும் வேலூருக்கு ஒப்பீட்டளவில் அருகிலேயே உள்ளன.

நாகார்ஜூன சாகர் விமான நிலையம்; இது தெலங்கானாவை ஒட்டி சுமார் 30 கி.மீ தொலைவில் அமைகிறது.

ஸ்ரீகாகுளம் விமான நிலையம்; இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி அமைகிறது. இடைப்பட்ட தூரம் 20 கி.மீ முதல் 40 கி.மீ.

* போகபுரம் விமான நிலையம்

விசாகப்பட்டினத்தில் திறக்கப்பட்டுள்ள இது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. இது ஒடிசாவை ஒட்டியுள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி சுமார் 90 கி.மீ முதல் 100 கி.மீ தொலைவில் அமைகிறது.

* தகதர்த்தி விமான நிலையம்

இது எஸ்பிஎஸ்ஆர் நெல்லூரில் அமைகிறது. தமிழ்நாட்டில் இருந்து 70 கி.மீ முதல் 90 கி.மீ தொலைவில் அமைகிறது.வட தமிழ்நாடு மக்களை ஈர்க்கக் கூடியது.

* திமுக ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட தொழில் வளர்ச்சி

சென்னையின் கிடங்கு பரப்பளவு தொடர்பான தனியார் நிறுவன ஆய்வில், கிடங்கு பயன்பாட்டுக்காக சென்னையில் ஆண்டுதோறும் சுமார் 40 முதல் 50 லட்சம் சதுர அடி சேர்க்கப்படுகிறது. இந்த புதிய இடங்கள் விரைவாகவே பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 2024 அக்டோபர் வரையிலான 12 முதல் 15 மாதங்களில் மொத்தம் 1,500 ஏக்கர் அளவிலான நிலப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 60 முதல் 70 லட்சம் சதுர அடி புதிய கிடங்கு வசதிகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தனியார் ஆய்வில் தெரிவித்திருந்தது.

கடந்த திமுக ஆட்சியில் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் உருவான புதிய கார் தொழிற்சாலைகள் மற்றும் விரிவாக்கம், மாம்பாக்கத்தில் ஐபோன் உற்பத்தி, டாடா எலெக்ட்ரானிக்ஸ் முதலீடுகள் காரணமாக கிடங்கு தேவை அதிகரித்ததே இதற்கு காரணம் என தொழில்துறையினர் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர். இந்த உள்கட்டமைப்புகளில் ஒன்றான பரந்தூர் விமான நிலையத்தை தற்போதைய அரசு கைவிட்டு விடக்கூடாது என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

* துறைமுகங்களும் விரிவாக்கம்

விமான நிலையங்களை மட்டுமின்றி துறைமுக கட்டமைப்புகளையும் ஆந்திரா அரசு உருவாக்கி வருகிறது. தற்போது விசாகப்பட்டினம், கங்காவரம், கிருஷ்ணாபட்டினம், காக்கிநாடா, ராவ்வா, நக்கப்பள்ளி உட்பட 7 துறைமுகங்கள் உள்ளன. இதுதவிர எஸ்பிஎஸ்ஆர் நெல்லூரில் ராமயபட்டினம் துறைமுகம், ஸ்ரீகாகுளத்தில் முலபேட்டா துறைமுகம், கிருஷ்ணாவில் மச்சிலிபட்டினம் துறைமுகம், காக்கிநாடாவில் காக்கிநாடா சிறப்பு பொருளாதார மண்டல கேட்வே துறைமுகம் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது. இவற்றில் முலபேட்டா ஒடிசா அருகிலும், ராமயபட்டினம் தமிழ்நாட்டுக்கு அருகிலும் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.