Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆந்திராவில் காற்றால் உதிர்ந்து விழுந்தது வேலூர் மண்டிக்கு மாங்காய் வரத்து அதிகரிப்பு

*விலை சரிந்து கிலோ ரூ.10க்கு விற்பனை

வேலூர் : வேலூர் மாங்காய் மண்டிக்கு ஆந்திராவில் இருந்து காற்றில் உதிர்ந்த மாங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது.

வேலூர் மாங்காய் மண்டிகளை பொறுத்தவரை உள்ளூர் மட்டுமின்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, அனந்தப்பூர், திருப்பதி மாவட்டங்களில் இருந்தும் மாங்காய் வரத்து உள்ளது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் மழை போதுமான அளவில் இல்லாததால் மாங்காய் பூக்கள் பெருமளவில் உதிர்ந்ததால் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக வேலூர் மாங்காய் மண்டிகளுக்கு வர வேண்டிய மாங்காய் வரத்து இந்த சீசனில் குறைந்து போனது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலத்தின் அதிகளவிலான வெயில் பதிவாகி வருகிறது. அதற்கேற்ப வறட்சியின் கோரமுகம் தென்மாநிலங்களை பெருமளவில் பாதித்துள்ளது. இதனால் கோடை மழையை மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், மழைக்கு பதில் சூறைக்காற்றும், லேசான தூறலுடன் மழையின் போக்கு ஏற்கனவே விளைச்சல் பாதிப்பு அச்சத்தில் இருந்த விவசாயிகளை மேலும் வேதனையில் தள்ளியுள்ளது.

பலத்த சூறைக்காற்று தமிழகத்தின் வடமாவட்டங்களை மட்டுமின்றி ஆந்திராவின் தென்மாவட்டங்களையும் கடந்த 4 நாட்களாக சுழற்றி அடித்ததால் மாமரங்களில் இருந்த மாம்பிஞ்சுகள், முற்றாத காய்கள் அனைத்தையும் மண்ணில் உதிர்த்துள்ளது. தற்போது இவைதான் சரக்கு லாரிகள் மூலம் வேலூர் மாங்காய் மண்டிகளுக்கு வந்து குவிந்துள்ளன. இதனால் கடந்த சில நாட்கள் வரை கிலோ ₹100க்கு மேல் விற்பனையான பெங்களூரா, பங்கனப்பள்ளி, செந்தூரா வகை காய்களும், பழங்களும் தற்போது விலை சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக உதிர்ந்த மாங்காய், மாம்பிஞ்சுகள் கிலோ ₹10க்கு நேற்று விற்பனையானது.

இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ‘வழக்கமாக 4 லாரிகளுக்கு மேல், அதாவது 8 முதல் 10 டன்கள் வரை மாங்காய் வரத்து இருக்கும். இந்த ஆண்டு அது ஒன்று அல்லது இரண்டாக குறைந்தது. கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருவதால் மரங்களில் மிச்சம் மீதியிருந்த பிஞ்சுகளும், காய்களும் உதிர்ந்துபோயின. இன்று அவைதான் சித்தூர் மாவட்டத்தில் இருந்தும், உள்ளூர் பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்துள்ளது’ என்றனர்.