Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தண்ணீர் தர மாட்டோம் என பிடிவாதமாக இருப்போரிடம் பேச நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க.! எதை சாதிக்க போறீங்க?

சென்னை: 1 சொட்டு நீர் கூட தர கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது, அங்கு போய் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள் என்று முதல்வர் விஜய்க்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், காவிரி ஆணையம் உத்தரவிடும் தண்ணீர் திறக்காமல் ஆட்டம் காட்டும் கர்நாடகத்திடம், தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காமல் சென்று உரிமைகளை அடகு வைக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தான் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 15 நாள்களில் வெறும் 4.5 டிஎம்சி நீர் மட்டும் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். இது ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரில் பத்தில் ஒரு பங்கு தான். ஆனால், அந்த அளவுக்கு குறைந்த நீரைத் திறப்பதற்குக் கூட கர்நாடகம் தயாராக இல்லை.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 67.078 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 25,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஆறில் ஒரு பங்கு நீரை மட்டுமே திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறையாது. மாறாக தினமும் 1.9 டி.எம்.சி வீதம் அணைகளின் நீர் இருப்பு 15 நாள்களில் 28 டி.எம்.சி அதிகரிக்கும். ஆனாலும் தமிழகத்திற்கு குறைந்த அளவு நீரைக் கூட தருவதற்கு கர்நாடக அரசுக்கு மனமில்லை.

தமிழ்நாட்டில் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசு மறுக்கிறது; அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு தமிழ்நாட்டுக்கு எதிராக போராட வைக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் கர்நாடகத்துக்கு சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் பேச்சு நடத்தியே தீருவேன் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் பிடிவாதம் பிடிப்பது தமிழகத்திற்கு நலனுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

அதே போல தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்புகள் காவிரி பாயும் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக எச்சரித்திருக்கின்றன. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்பதற்காகத் தான் கர்நாடக அரசும், கன்னட இயக்கங்களும் இத்தனையும் செய்கின்றன. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட தரக் கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது அங்கு சென்று பேச்சு நடத்தி நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள் என்று முதல்வர் விஜய்க்கு, அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் அங்கு சென்றால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. மாறாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் தான் தாரைவார்க்கப்படும். இந்த தவறை முதலமைச்சர் விஜய் செய்யக் கூடாது. காவிரி பிரச்சினை, மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த பேச்சுகளையும் தமிழ்நாடு நடத்தக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் நிலைப்பாடு. இதற்கு எதிராக எந்த முடிவையும் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளக் கூடாது. எனவே, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லும் முடிவை விஜய் கைவிட அறிக்கை வாயிலாக வலியுறுத்தி உள்ளார்.