சென்னை: டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெலியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும். தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.
டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி அவர்களுக்கு மது விற்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும்.
மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் தான். அது தான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது. இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள். மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
