Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அமோனியா வாயு கசிவு வழக்கு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை; அமோனியா வாயு கசிவு வழக்கில், ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் என்னும் இடத்தில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், ஜூன் 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு, இதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் ஜெகன், தண்டையார்பட்டியைச் சேர்ந்த மோகன், தொழிற்சாலை மேலாளர் டேனியல் மற்றும் தொழிலாளர் முகவர் சுரேஷ் ஆகியோரைத் திருவள்ளூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன் மற்றும் மோகன், மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை; ஜாமீன் வழங்கக் கூடாத என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, மனுதாரர்கள் கடந்த 50 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதாகவும் கூறினார்.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, உயிரிழந்த ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; காயமடைந்த நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

மேலும், எதிர்காலத்தில் அரசோ அல்லது விசாரணை ஆணையமோ வேறு ஏதேனும் இழப்பீடுகளை நிர்ணயித்தால், இந்த உத்தரவு அதனைக் கட்டுப்படுத்தாது. மற்ற இழப்பீடுகளைப் பெற உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தகுதியுடையவர்கள்  என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.