*ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர்
தஞ்சாவூர்: 100 நாள் வேலை கேட்டு அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் தாமரைச்செல்வி தலைமையில் 100 நாள் வேலை அனைவருக்கும் வழங்கக் கோரி மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருவதை கண்டித்தும், மாநில அரசு அறிவித்த வேலை நாட்களை அமுல்படுத்த வலியுறுத்தியும் மனு கொடுத்து கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் ராஜா, மாவட்டச் செயலாளர் சுந்தரராஜன், மாவட்டத் தலைவர் பழனிச்சாமி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், துணைச் செயலாளர் புருஷோத்தமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் குரு. சிவா, ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனுவை வழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


