Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து எடப்பாடி புது உருட்டு: தொகுதி பங்கீடு பத்தி பேசல... எலக்‌ஷன் பத்திதான் பேசினோம்...

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். இவரது வருகைக்கு முன்பே தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பாஜ திட்டமிட்டது. ஆனால், எடப்பாடி ஒத்துழைக்காததால், இழுபறி நீடித்தது. மோடி வந்து சென்ற பிறகு பியூஸ் கோயல், எடப்பாடி மற்றும் கூட்டணி கட்சிகளுடன் மதுரையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், எந்த உடன்பாடும் எட்டாததால் எடப்பாடி பழனிசாமி அன்று இரவு சென்னை திரும்பினார். இதனால் கோபமடைந்த அமித்ஷா, டெல்லிக்கு வர சொல்லி எடப்பாடிக்கு உத்தரவிட்டார். அவரது அழைப்பை ஏற்று, நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை எடப்பாடி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பாஜவுக்கு 80 சீட் கேட்டுள்ளார். அதற்கு எடப்பாடி மறுத்துவிட்டார். இறுதியாக பாஜவுக்கு 55 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். இதில், டிடிவிக்கு 10, வாசனுக்கு 3, ஐஜேகே 1, புதிய நீதிக்கட்சி 1, தமிழக முன்னேற்றக்கழகம் 1, பார்வர்டு பிளாக் 1 வழங்க உள்ளோம். பாமகவில் அன்புமணிக்கு 18, ராமதாசுக்கு 5 சீட்டுகளை நீங்கள் கொடுங்கள். 156 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று அமித்ஷா தெரிவித்து உள்ளார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சென்னைக்கு கிளம்பிய எடப்பாடி பழனிசாமி டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினேன். தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து இருவரும் கலந்து பேசினோம். தேர்தலில் இரு கட்சிகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விவாதித்தோம். எங்கள் கூட்டணி வலுவாகவும், சுமுகமாகவும் இருக்கிறது. சில புதிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

அவை அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. விரைவில் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும். தேர்தல் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதனால் எந்த அவசரமும் தற்போது இல்லை. தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதிமுக தலைமையிலான கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைப்போம்’’ என்றார்.

* சசிகலா பற்றி கேள்வியால் கடுப்பு

சசிகலா புதிய கட்சி தொடங்கி உள்ளதால் உங்களது கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதா? அதுகுறித்து ஏதேனும் ஆலோசனை நடத்தினீர்களா என்ற கேள்விக்கு, ‘‘சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக எந்த ஒரு விவாதமும் செய்யவில்லை. அது தேவையற்ற கேள்வி, அதை இத்துடன் விட்டுவிடுங்கள்’’ என்றார். தொடர்ந்து, சசிகலா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கடுப்பான எடப்பாடி, ‘அவரிடம் போய் கேளுங்கள். அவரை என்னிடம் கேட்காதீர்கள்’ என்று கூறினார்.