Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமெரிக்க ஸ்டைலில் அசத்தல் உணவுகள்!

30க்கு மேல் பர்கர் வெரைட்டி...

``தமிழகத்தில் உள்ள சிட்டிகள் அனைத்திலும் இன்றைக்கு மேற்கத்திய கலாச்சாரங்கள் கோலோச்சி வருகின்றன. உடை மட்டும் அல்லாமல் உணவுகளும் இன்றைக்கு வெளிநாட்டு ஸ்டைலில் மாறிவிட்டன. இளசுகள் அனைவரும் பர்கர், சான்ட்வெஜ் என்று சாப்பிடத் தொடங்கிவிட்டனர். ஒரு உணவகத்தின் ருசி பிடித்துவிட்டால் அந்த கடைக்கு ரெகுலர் கஷ்டமராகவே மாறிவிடுகின்றனர். அளவான காரம், ஆச்சரியப்பட வைக்கும் ருசியும் இதற்கு முக்கிய காரணம்’’ இன்றைய தலைமுறையின் நாடித்துடிப்பை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் நம்மிடம் பேசத்தொடங்கினர் சென்னை, அண்ணா நகர், செனாய் நகரில் அமைந்துள்ள தி நியூ ஹை ஜாய்ண்ட் ரெஸ்டாரண்டின் உரிமையாளர்களான ஜோமித் மற்றும் நாசர். இந்த ரெஸ்டாரண்ட்டை இளைய தலைமுறை விரும்பும் வகையில் வடிவமைத்துள்ள இந்த இருவரையும் சந்தித்தபோது அவர்கள் மேலும் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். `` நான் உணவுக்கலை குறித்து துபாயில் படித்துவிட்டு வந்திருக்கிறேன். படித்து முடித்த பின்பு துபாயில் ஒரு உணவகத்தில் குக்காக பணிபுரிந்தேன். துபாயில் இருந்து தங்கை திருமணத்திற்காக சென்னை வந்த நான், கொரோனா ஊரடங்கின் காரணத்தினால் மீண்டும் துபாய் போக முடியவில்லை.

கல்னரி ஆர்ட்ஸ் பற்றிய பாடப்பிரிவு என்பதால் நான் பெரும்பாலான நாட்டு உணவுகளை தயார் செய்வேன். அதில் எனக்கு மிகவும் பிடித்தது அமெரிக்க நாட்டு ஸ்டைல் உணவுகள்தான். அமெரிக்காவில் உணவுகள் தயார் செய்யப்படுவதையும், அதை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதையும் பார்க்கும்போதே அந்த உணவுகள் நம்மை சாப்பிடத் தூண்டும்.நமது ஊரில் எப்படி போண்டா, வாழைக்காய் பஜ்ஜி, முட்டை மசால் போண்டா, பானிப்பூரி, பேல்பூரி, மசாலா பூரிலாம் ரொம்ப பேமஸோ, அதுபோல அமெரிக்காவில் பர்கர், ப்ரைஸ், நெக்டு சிக்கன், ஸ்வீட் சில்லி சிக்கன் விங்க்ஸ் எல்லாம் ரொம்ப பேமஸ். இந்த வகை உணவுகளை வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இதுபோன்ற உணவுகளை நம்ம ஊர் ஸ்டைலில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கியதுதான் தி ஹை ஜாய்ண்ட் ரெஸ்டாரண்ட். துபாயில் இருக்கும் ரோட்டுக் கடைகளில் அதிகம் கூட்டம் இருக்கும் கடை ஒன்று என்றால் அது தி ஹை என்ற உணவகத்தில்தான். இந்தக் கடையின் இன்ஸ்பிரேஷனில்தான் என்னுடைய உணவகத்திற்கு தி ஹை ஜாய்ண்ட் என்று பெயர் வைத்தேன். அதேபோல்தான் இன்றைக்கு எங்களது உணவகத்திற்கும் மக்கள் அதிகம் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

முதன்முதலில் நாவலூரில்தான் உணவகத்தைத் தொடங்கினேன். உணவகம் துவங்கியது முதலே நல்ல வரவேற்பு இருந்ததால் ஃபுட்டிகளின் ஹப் என்று அழைக்கப்படும் அண்ணா நகரில் தொடங்கினேன். கல்லூரிகள், கம்பெனிகள், கடைகள் நிறைந்த பகுதி என்பதால் வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கியுள்ளனர். முதன்முதலில் 5 டிஷ்தான் கொடுத்து வந்தேன். இன்றைக்கு 50 டிஷ் வரை கொடுத்து வருகிறேன். மெனுகார்டில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள 45 டிஸ்களும் வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டதாலே சேர்த்தேன். உணவகத்தில் ஒவ்வொரு டிஸ்ஸூம் என்னுடைய கைப்பக்குவத்தில்தான் தயார் செய்யப்படுகிறது. இந்த உணவகத்தை என்னுடைய நண்பர் ஜோமித்தான் நிர்வகித்து வருகிறார்’’ என்ற நாசரைத் தொடர்ந்து நம்மிடம் ஜோமித் பேசத் துவங்கினார்.`` எங்களது உணவகத்தில் உள்ள அனைத்தும் அமெரிக்க ஸ்டைல் புட் என்பதால் நம் மக்கள் ஒரு புதிய டிஷ்ஷை ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று உணவகத்திற்கு வருகிறார்கள். ஒரு டி‌ஷ்ஷை சாப்பிட்டு செல்லலாம் என்று வருபவர்கள் உணவின் ருசிக்காக மற்றொரு டிஷ்ஷையும் ட்ரை பண்ணிடுவாங்க. பிரபலங்கள் பல பேர் இங்கு வந்து சாப்பிடுவது வழக்கம். அப்படி வருபவர்கள் சில புதிய டிஷ்களை சமைத்து தரச் சொல்லி சாப்பிடுவார்கள்.

அந்த டிஷ் நல்ல ருசியில் இருந்தால் அதனை மற்ற வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் தரும் அபிப்பிராயத்தை கருத்தில் கொண்டு அந்த டி‌ஷ்ஷை மெனு கார்டில் சேர்ப்பேன். உணவகத்திற்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் நான் உறவினர்கள் போலத்தான் பார்க்கிறேன். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உணவினைப் பார்த்து பார்த்து தயார் செய்கிறோம். உணவகத்தில் வெஜ், நான்வெஜ் என்று கொடுத்து வருகிறோம். வெஜ்ஜில் பர்கர் வகைகளில் க்ளாசிக் வெஜ், கிளாசிக் டபுள் வெஜ், செஸ்வான் வெஜ், கொரியன் வெஜ், பெர்ரி பெர்ரி வெஜ்ஜும் கொடுத்துட்டு இருக்கோம். காய்கறிகளுக்கு பதிலாக பிரட்டிற்குள் பனீரும் வைத்து தருகிறோம். உருளைக் கிழங்கில் ப்ரன்ச் ப்ரைஸ், சீஸ் கார்ன் நாக்கெட்ஸ்ஸூம் கொடுத்துட்டு இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் எங்க்ஸ்டர்ஸை சுண்டி இழுக்கும் நாச்சோஷும் கொடுத்துட்டு இருக்கோம். நான்வெஜ்ஜில் சிக்கன் நாக்கெட்ஸ், சிக்கன் பர்கர், நெக்டு சிக்கன், ஹாட் ப்ரைடு சிக்கன் டெண்டர்ஸும் கொடுத்து வருகிறோம். கொரியன் ப்ளேவரில் பெர்மெண்ட் செய்து தரப்படும் யங்நையம் சிக்கன் விங்க்ஸ் எங்களது உணவகத்தின் சிக்னேச்சர் டிஷ். வீட்டுச் செய்முறையில் செய்து கொடுக்கப்படும் ஸ்மோக்கி பார்பிக்யூ சிக்கன் விங்க்ஸூம் வழங்கி வருகிறோம்.

பிரட்டை டோ செய்வதில் இருந்து அதில் காய்கறிகள் வைத்து சிக்கனை ஸ்டப் செய்து தரப்படுவது வரை அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்கிறோம். சிக்கனில் பெர்ரி பெர்ரி மசாலாவைக் கலந்து அதனை எண்ணெயில் பொரித்து எடுத்துதான் பிரட்டிற்குள் ஸ்டப் செய்வோம். அப்போதுதான் சிக்கனில் மசாலாவின் சாரம் முழுவதுமாக உள்ளே இறங்கி சிக்கன் பர்கரின் ருசி நாவில் நிற்கும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை நாங்கள் உணவகத்தில் மறுபடி பயன்படுத்துவது கிடையாது. சிக்கன் ப்ளேட்டரில் வெவ்வேறு பிளேவரில் இருக்கும் சிக்கன் விங்க்ஸை கொடுக்கிறோம். அதேபோல எங்களது உணவகத்தில் பர்கரில் மட்டும் கிளாசிக் வெஜ் டிலைட்டில் சிங்கிள் டபுள் பர்கர், கிரிஸ்பி காட்டேஜ் சீஸ் பர்கர், ஹானஸ்ட் சிங்கிள் டபுள் பர்கர், லோடர் ஏ1 பர்கர், கிளாசிக் ப்ரைடு சிக்கன் பர்கர், தந்தூரி சிக்கன் பர்கர், ப்ளை ஹை சிக்கன் பர்கர் என்று 30க்கும் அதிகமான பர்கரைக் கொடுத்து வருகிறோம். அதேபோல் டேக்கோஸில் 420 டேக்கோ, ப்ரைடு சிக்கன் டேக்கோ, டூ ஹாட் டூ ஆண்டில் கொடுத்துட்டு இருக்கோம். உணவகத்திற்குத் தொடர் வாடிக்கையாளர்கள் வருவதற்கு முக்கிய காரணம், சுவைக்கு நாங்கள் சேர்க்கும் மசாலாவும், பிரெஷ்ஷாக தினம் தினம் வாங்கும் இறைச்சியும்தான். ஒரு உணவைத் தயார் செய்யும்போது அனைத்து வகையான சமையல் முறைகளும் ஒன்றாக இருக்காது. பர்கர் மற்றும் விங்ஸின் ஃப்ளேவருக்கு ஏற்ப குக்கிங் செய்முறை மாறுபடும்’’ என பேசி முடித்தார் நாசர்.

- குணா

படங்கள்: வின்சென்ட் பால்