Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் டிரம்பிடம் மோடி பணிந்ததற்கு எப்ஸ்டீன் பைல்ஸ் காரணமா? உலக அளவில் புயலை கிளப்பும் விவகாரத்தின் பின்னணி

பல மாதமாக இழுத்துக் கொண்டிருந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒரே தொலைபேசி அழைப்பில் முடிவுக்கு வந்திருந்தது. பிரதமர் மோடியை நேரடியாக தொடர்பு கொண்டு அதிபர் டிரம்ப் பேசிய சில நிமிடங்களில், இருதரப்பு ஒப்பந்தம் முடிந்து விட்டதாக அதிபர் டிரம்பே அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவையே அடகு வைக்கும் பல அம்சங்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இந்திய விவசாயத்துறையின் கதவுகள் அமெரிக்காவுக்கு திறக்கப்பட்டுள்ளன. இது இந்திய விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குவதாகவும், அமெரிக்காவில் ரூ.45 லட்சம் கோடி முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி ஒப்புக் கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.

டிரம்பின் ஆயுதம்: ஆனால் இதைப் பற்றி எல்லாம் மோடி அரசு எந்த அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடாமல் உள்ளது. நேற்று கூட பிரதமர் மோடி மக்களவைக்கு வந்தும் எதுவும் பேசாமல் புறப்பட்டுச் சென்று விட்டார். அமெரிக்காவின் அத்தனை கண்டிசன்களுக்கும் பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதற்கு காரணம் எப்ஸ்டீன் கோப்புகளும், அதானியின் அமெரிக்க வழக்கும் தான் என எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

உண்மையிலேயே எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி பெயர் அடிபட்டதால் கலக்கமடைந்துள்ளாரா, இதையே ஆயுதமாக பயன்படுத்திய அதிபர் டிரம்ப் தனது காரியத்தை சாதித்துள்ளாரா, யார் இந்த எப்ஸ்டீன், எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன, அமெரிக்காவை தாண்டி இந்திய அரசியலிலும் உலக அரசியலிலும் எப்ஸ்டீன் கோப்புகள் எப்படி புயலை கிளப்பிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் தற்போது பெரிய அளவில் டிரெண்டிங்காகி உள்ளது.

யார் இந்த எப்ஸ்டீன்? ஜெப்ரி எப்ஸ்டீன் செல்வாக்குமிக்க அமெரிக்க நிதி ஆலோசகர். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க நபர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். 2008ம் ஆண்டில், 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம், எப்ஸ்டீன் தனது பாம் பீச் வீட்டில் தங்கள் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர்.

அந்த பாம் பீச் வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன, இதைத் தொடர்ந்து 2019ல் கைது செய்யப்பட்ட எப்ஸ்டீன், நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்ததாக வழக்கு முடிக்கப்பட்டு விட்டது.

* எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?

எப்ஸ்டீனுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதில், லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் என்று அழைக்கப்படும் 72 ஏக்கர் தீவு குறிப்பிடத்தக்கது. கரீபியனில் உள்ள அமெரிக்க விர்ஜின் தீவுகளின் ஒரு பகுதியான செயின்ட் தாமஸ் கடற்கரையிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. அங்கு பல வில்லாக்கள் உள்ளன. அங்கு வைத்து மிகப்பெரிய அளவில் பாலியல் தொழிலை எப்ஸ்டீன் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அரசியல் முக்கிய புள்ளிகளுக்கு பல இளம் வயது சிறுமிகளை இரையாக்கி உள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க சிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் பல ஆவணங்கள், வீடியோ, பென் டிரைவ் என லட்சக்கணக்கான சான்றுகள் சிக்கி உள்ளன. அவற்றை தொகுத்து வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளே எப்ஸ்டீன் கோப்புகள் எனப்படுகின்றன. மொத்தம் 60 லட்சம் ஆவணம்: இந்த கோப்புகள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டு வருகிறது. எப்ஸ்டீன் கோப்புகளில் மொத்தம் 60 லட்சம் ஆவணங்கள் உள்ளது. இதில் சமீபத்தில் வெறும் 3 லட்சம் ஆவணங்களும், அதற்கு முன் சில ஆயிரம் ஆவணங்கள் மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளது.

அந்த ஆவணங்களிலேயே அமெரிக்கா மட்டுமின்றி உலகமே ஆடிப் போயிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் அனில் அம்பானி வரை அத்தனை பெரும் புள்ளிகளின் வண்டவாலங்களும் தண்டவாளம் ஏறியுள்ளது. எப்ஸ்டினுக்குச் சொந்தமான தீவுகளுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பலமுறை அவரது தனி விமானத்தில் பயணம் செய்ததற்கான ஆவணங்கள் வெளியாகின.

தொழிலதிபர் எலான் மஸ்க், பாப் இசை உலகின் ஜாம்பவான் மைக்கேல் ஜாக்சன், சவுதி இளவரசர் என எப்ஸ்டீன் கோப்புகளில் ஏராளமான பிரபலங்களின் பெயர்கள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அரிய வகை நோயால் கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்கள் செயலிழந்தும் பல சாதனைகள் படைத்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்களும் விதிவிலக்கு கிடையாது.

வெறும் பாலியல் குற்றவாளி அல்ல: ஆனால் எப்ஸ்டீன் வெறும் பாலியல் குற்றவாளி மட்டுமல்ல. இவர் பல இளம்பெண்களை வைத்து பெரிய அளவில் பாலியல் நெட்வொர்க் நடந்தி வந்தாலும், தனக்கிருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல நாடுகளின் கொள்கை முடிவுகளில் கூட மூக்கை நுழைத்துள்ளார். அந்த வகையில் இந்தியாவிலும் எப்ஸ்டீன் கைவரிசை காட்டியிருப்பது அவரது கோப்புகளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயரும் இருந்தது இந்திய அரசியலில் பெரும் புகைச்சலை கிளப்பியது.

இஸ்ரேல் பயணம்: கடந்த 2017ல் எப்ஸ்டீன் ஒரு மின்னஞ்சலில், ‘‘இந்திய பிரதமர் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, சில வாரங்களுக்கு முன்பு அவர் சந்தித்த அமெரிக்க அதிபரின் நலனுக்காக இஸ்ரேலில் ஆடிப் பாடினார்’’ என கூறி உள்ளார். இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது. 2017ல் பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் சென்றது மட்டுமே உண்மை என்றும் மற்ற தகவல்கள் எப்ஸ்டீனின் பிதற்றல்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

காங். குற்றச்சாட்டு: ஆனால், பிரதமர் மோடி எப்ஸ்டீனின் ஆலோசனையை கேட்டு, அதிபர் டிரம்பின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இஸ்ரேலில் செயல்பட்டுள்ளார். அப்படியென்றால் எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பிருப்பது தெளிவாகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. இதுதவிர, தொழிலதிபர் அனில் அம்பானி, எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் தொடர்புகளை மேற்கொண்ட தகவல்களும் வெளியாகி உள்ளன.

அதில் அனில் அம்பானி எப்ஸ்டீனை நேரடியாக சந்தித்துள்ளார். அமெரிக்க உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியை சந்திக்கவும், பிரதமர் மோடியின் பயண திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களையும் அவர் எப்ஸ்டீனுக்கு பகிர்ந்துள்ளார்.

ஒன்றிய அமைச்சருக்கு தொடர்பு: இதுதவிர, 2014ல் வெளியுறவுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று பாஜவில் சேர்ந்து ஒன்றிய அமைச்சரான ஹர்தீப் சிங் பூரியின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம் பெற்றுள்ளது. பூரிக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே ஜூன் 2014ல் இருந்தே மின்னஞ்சல் பரிமாற்றங்கள் உள்ளன. லிங்க்ட்இன் இணை நிறுவனர் ரீட் ஹாப்மேனின் இந்தியப் பயணத்திற்கு எப்ஸ்டீன் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தியாவில் முதலீடு செய்ய ஹாப்மேனுக்கு பரிந்துரைக்க எப்ஸ்டீனின் உதவி நாடப்பட்டுள்ளது. பூரி, எப்ஸ்டீனை அவரது மன்ஹாட்டன் டவுன்ஹவுஸில் குறைந்தது 3 முறையாவது சந்தித்துள்ளார் என்பதையும் ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த சந்திப்பு வணிகம் தொடர்பானவை என ஹர்தீப் சிங் பூரி ஒப்புக் கொண்டுள்ளார். எனவே மோடி அரசாங்கத்தில் ஏதோ ஒரு வகையில் எப்ஸ்டீன் சம்மந்தப்பட்டுள்ளார். அதை வைத்து தான் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் பணிய வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

எப்ஸ்டீன், அதிபர் டிரம்பின் மிக நெருங்கிய நீண்டகால நண்பர். தொழில் விஷயத்திலும் அரசியலிலும் டிரம்புக்கு பல வகையிலும் உதவியவர் எப்ஸ்டீன் என்பது குறிப்பிடத்தக்கது. எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் பல லட்சம் ஆவணங்கள் பாக்கி உள்ளன. அவைகளும் வெளியிடப்படும் பட்சத்தில் இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.