185 கி.மீ. தூரம் 2.5 மணி நேரம் உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள்: ‘எமர்ஜென்சி எஸ்கார்ட்’ மூலம் கேரளா டூ கோவைக்கு மின்னல் வேக பயணம்
கோவை: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயது முதியவர். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று பணியின்போது முதியவருக்கு கண்ணில் இரும்பு ராடு தாக்கியதில் படுகாயமடைந்தார். சக பணியாளர்கள் முதியவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு, குறித்த நேரத்தில் கொண்டு செல்ல பரிந்துரைத்தனர்.
அதன்பேரில், கோழிக்கோட்டில் இருந்து முதியவரை ஏற்றிக் கொண்டு கோவையை நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. இதனிடையே அவசர காலத்தில் உதவுவதற்காக தமிழக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உருவாக்கியுள்ள ‘எமர்ஜென்சி எஸ்கார்ட்’ என்ற குழுவில் இத்தகவல் பகிரப்பட்டது. ஆம்புலன்ஸ் வாளையாறு வழியாக வரும் தகவலையடுத்து, கோவையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களான சதீஷ், பிரபாத், மணி மற்றும் மதுரை வீரன், சந்தானம், பூபதி ராஜா, சதா ஆகியோர் 4 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் வாளையாறில் இருந்து அந்த கேரள ஆம்புலன்சுக்கு பக்க பலமாக உடன் சென்றனர்.
கேரள ஆம்புலன்சின் முன்புறம் 3 ஆம்புலன்சுகள் சென்று, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. பின்புறம் ஒரு ஆம்புலன்ஸ் பாதுகாப்பிற்காக வந்தது. ஆம்புலன்ஸ் செல்லும் பகுதிகள் குறித்த விவரங்களை வாட்ஸ்-ஆப் குழு மூலம் கண்காணித்து ஹக்கிம், இருதயராஜ் ஆகிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதன்மூலம், போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 185 கி.மீ தொலைவை 2.5 மணி நேரத்தில் கடந்து, அந்த முதியவர் குறித்த நேரத்தில் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக இந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆகும்.
ஆனால் முக்கியஸ்தர்களுக்கு போலீசார் வழங்கும் பாதுகாப்பு எஸ்கார்ட் வாகனங்களை போல, எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல், கேரளாவில் இருந்து வந்த தொழிலாளிக்கு ஆம்புலன்சில் எஸ்கார்ட் வழங்கி உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உரிய நேரத்தில் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு அங்கு சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.