Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆழ்வார்திருநகரி அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்

*அதிகாரிகளின் அலட்சியத்தால் தவிக்கும் மக்கள்

ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரி பேரூராட்சிக்குட்பட்ட பத்தவாசல் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வீடுகளை புதுப்பித்து தருவதுடன் பட்டா வழங்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆழ்வார்திருநகரி பேரூராட்சி 10வது வார்டு பகுதி, விவசாயக்கூலி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடமாகும்.

பத்தவாசல் பகுதி என்றழைக்கப்படும் இங்கு கடந்த 1966ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இடத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 22 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறினர். பட்டா கொடுக்கப்படாத நிலையில், தற்போது வீடுகளில் விரிசல் விழுந்தும் மேற்கூரை சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிந்தபடி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால் பத்தவாசல் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் வீடுகளை புதுப்பித்துக்கட்ட தேவையான உரிய ஆவணங்கள் இப்பகுதி மக்களிடம் இல்லாததால் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் குழந்தைகளுடன் ஆபத்தான நிலையில் வசித்து வருகின்றனர்.

ஒரு சிலர் வீடுகளை காலி செய்து வேறு வழியின்றி வாடகை வீட்டிற்கு சென்றுள்ளனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வாட்டர் டேங்க் கட்டிடமும் விரிசல் விழுந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே வீடுகளை புதுப்பித்துக்கட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். குடிநீர் தொட்டி அமைந்துள்ள கட்டிடத்தை புதுப்பித்து மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் கூடுதலாக குடிநீர் தொட்டி அமைத்திட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து முனியசேகர் கூறுகையில், ‘பத்தவாசல் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. வீடுகளை இடித்து புதிதாக கட்ட வேண்டும் என்றால் பட்டா அவசியம்.

பட்டா கேட்டு தாலுகா அலுவலகம் சென்றால் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லுங்கள், கலெக்டர் அலுவலகம் சென்றால் தாலுகா அலுவலகம் செல்லுங்கள் என கூறுகின்றனர். இதற்காக 5 ஆண்டுகளுக்கும் மேலாக அலைந்து கொண்டிருக்கிறோம்’ என்றார்.உஷா கூறுகையில், ‘எங்களுக்கு வீடு கொடுத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

இப்போது வீடுகள் இடிந்த நிலையில் இருப்பதால் ஒரே வீட்டில் நான்கு, ஐந்து குடும்பமாக இருக்கிறோம். பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்திலும் கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை அலைந்தாலும் கிடைக்கவில்லை’ என்றார்.

சாந்தி கூறுகையில், ‘ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு வீடு வழங்கப்பட்டது. தற்போது இடிந்து விழும் நிலையில் எந்த வசதியும் இல்லாமல் குழந்தைகளோடு வசித்து வருகிறோம். 5 முறை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம்.

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டா இல்லாததால் வீடு கட்ட முடியவில்லை. மின் இணைப்பு பெற முடியவில்லை. வங்கி கடன் கிடைக்கவில்லை. மனு கொடுத்தாலும் எந்த அதிகாரியும் வந்து நேரில் பார்ப்பதில்லை. 5 முறை மனு அளித்துள்ளோம்.

தாசில்தார் அப்படி ஒரு பைல் எங்களிடம் இல்லை என்கிறார். 2023ல் வெள்ளம் வந்த போது 20 வீடுகள் இடிந்த நிலையில் உள்ளது. பட்டா இல்லாததால் தீர்வை கிடைக்கவில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.