நமக்கு ஏற்பட்ட தாழ்வுகளை, தோல்விகளை மனோ தைரியத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.எதிலும் அதிக சிரத்தை காட்டாமல் சாதாரண மனநிலையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தால் இது சுலபம். நம்முடைய சக்தியின் எல்லை இதுதான் என்று உணர்ந்தால் தோல்வியை பற்றியோ,தாழ்வைப் பற்றியோ அவ்வளவாக அலட்டிக்கொள்ள மாட்டோம்.வெற்றி பெறுவது மட்டுமே இலக்காகக் கொண்டவர்களுக்கு, குறைகள் பற்றி யோசிக்க நேரம் இருப்பதில்லை.
ஜோஹன்னஸ் கெப்ளர், இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். பிறப்பிலேயே வலது கை இல்லாத நிலை, இளம் வயதில் பெரியம்மை நோயால் கண் பார்வை ஏறக்குறைய முழுமையாக மங்கிய நிலை.இது போதவில்லை என்று வறுமை நிலை வேறு. கல்வி கற்க இயலாத சூழல். ஆனால் கெப்ளர் மனம் தளரவில்லை. உடலில் குறை இருந்தாலும் அவருடைய மனதில் குறை இல்லை. தொலைநோக்கி கருவியைப் பிடிக்க கை இல்லை. அதற்கெல்லாம் வருத்தப்படாமல் விண்வெளி ஆராய்ச்சியில் நம்பிக்கையுடன் ஈடுபட்டார்.
சூரியனை பூமியும் மற்ற கோள்களும் நீள் வட்டப் பாதையில் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளாமல் சுற்றி வருகின்றன என்ற உலகம் போற்றும் உண்மையை கண்டறிந்தார். இது கெப்ளர்ஸ் லா என அழைக்கப்படுகிறது. அவருடைய கண்டுபிடிப்பால் உலகமே அவரைப் பார்த்து வியந்து போனது.காரட்ஸ் பல்கலைக்கழகத்தில் வானவியல் பேராசிரியர் நியமிக்கப்பட்டுக் கௌரவிக்கப்படுகிறார். வெகுமதிகள் பல அவருக்கு காத்திருந்தன, தனது உடல் குறையை குறையாக எண்ணியிருந்தால் இந்த வெற்றி அவருக்கு கிடைத்திருக்குமா? உடலில் தான் அவருக்கு குறை, மனதில் அல்ல, மன தைரியமே அவருக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கிறது. உடல் குறை என்பது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தடை அல்ல. கைகள் இல்லாதவருக்கு தன்னம்பிக்கை தானே மூலதனம். இவரை போல மன தைரியத்துடன் மாற்றுச் சிந்தனையை மலரச் செய்து இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். இதற்கு உதாரணமாய் இந்த இளம் சாதனையாளரைசொல்லலாம்.
இந்தியாவின் முதல் குறைந்த விலை ஹாட் சாக்லெட் பிராண்ட்யை 21 வயதில் அனுவா காக்கர் என்ற இளம் பெண் துவக்கி உள்ளார்.
கோவிட்-19 பொதுமுடக்கத்திற்கு முன்னதாக நிறுவனத்தை துவக்கி, மெட்ரோ ரெயில் நிலையம் முன் விற்பனை செய்தவர் இன்று, இரண்டு லட்சம் கோப்பைகளுக்கு மேல் டெலிவரி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
நம்மில் பலரைப்போலவே அனுவா காக்கருக்கு ஹாட் சாக்லெட் மிகவும் பிடிக்கும். எனினும் அனுபவம் இல்லாத துறையில் நிறுவனத்தைத் துவக்குவோம் என அவர் நினைத்திருக்கவில்லை.2019 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பனஸ்தலி பல்கலைக்கழகத்தில் பிபிஏ பட்டம் பெற்ற பிறகு அவர் அர்பன்கிளாப் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
ஒரு நாள் இரவு, ஹாட் சாக்லெட் பருக விரும்பினார். கஃபேக்களில் மட்டுமே இது கிடைக்கும் என அவருக்கு புரிந்தது.வேலையில் சேர்ந்த புதிது என்பதால் மாதத்தில் சில முறை கஃபேக்களுக்கு சென்று செலவிட முடியாத நிலை அவருக்கு இருந்தது, அப்போது ஒருவருக்கு தேவைப்படும் போது சுவைக்கக் கூடிய வகையில், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான ஹாட் சாக்லெட் இல்லை என்பதை உணர்ந்தார்.
காபி, டீ, ஐஸ்கீரிம் கிடைப்பது போல, ஹாட் சாக்லெட் எளிதாக கிடைக்கவில்லை.இது பிரிமியம் உணவு என்பதால் பெரிய அளவில் சந்தை இல்லையா அல்லது இன்னமும் இந்த பிரிவு பெரிதாக கண்டறியப்படவில்லையா என யோசித்தார். இந்த எண்ணங்களின் பயனாக, ஆன்லைனில் கிடைக்கும் இந்தியாவின் ஒரே ஹாட் சாக்லெட் பிராண்டான ‘டிக்கில்’ என்ற பெயரில் துவக்கினார்.
ஆனால், ஆரம்பம் எளிதாக இருக்கவில்லை. ‘டிக்கில்’ என்ற பிராண்டை மிகவும் சிறிய அளவில் துவங்கி. ஐந்து லிட்டர் ஸ்டீல் ஜார், மூன்று லிட்டர் பால் மற்றும் ஹாட் சாக்லெட் தயாரிக்கத் தேவையான எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார். சந்தையின் தேவையை புரிந்து கொள்ள, குர்கோவன் மெட்ரோ நிலையம் அருகே விற்பனை செய்ய முடிவு செய்தார்.
தெருவில் நின்று கொண்டு ஹாட் சால்க்லெட்டை விற்க முயற்சிப்பது 21 வயது இளம் பெண்ணுக்கு கடினமாக இருந்தது. எனினும், 52 நிமிடத்தில் முழு ஜார் ஹாட் சாக்லெட்டையும் விற்க முடிந்தது. இது நம்பிக்கையை ஏற்படுத்தவே மெட்ரோ அருகே கடை ஏற்படுத்திக் கொண்டு, தினமும் 1,000 கோப்பைகள் விற்பனை செய்தார் அனுவா. இது 2019ல் நிகழ்ந்தது. சில மாதங்களில் கோவிட் அலை வீசத்துவங்கி உலகம் பொது முடக்கத்தை சந்திக்கவே அனுவா தனது சொந்த ஊரானா ஆக்ரா திரும்பினார்.
டிக்கில் பிராண்டை துவக்கிய போது, கஃபேக்கள் மற்றும் மையங்களுக்கு புதிய ஹாட் சாக்லெட்டை வழங்குவது திட்டமாக வைத்து இருந்தார் அனுவா. பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன் தான் இது பற்றி கஃபேக்களிடம் பேசத்துவங்கினார். ஆனால் கோவிட் எல்லாவற்றையும் பாதித்தது.அதனால் மூன்று மாதங்களுக்கு இதை நிறுத்தி வைத்தார்.
என்னுடைய இலக்கின்படி வாடிக்கையாளர்களை சென்றடைய கற்றுக் கொண்டேன். யாரை நோக்கி விளம்பரம் செய்வது, பொருளை எப்படி முன்னிறுத்துவது, சந்தையில் எப்படி இடம்பெறுவது என்றெல்லாம் கற்றுக்கொண்டேன் என்கிறார் அனுவா.
இணையத்தில் பரவலாக சென்றடைய ஃபேஸ்புக் மற்றும் கூகுள் விளம்பரம் உதவியது. ஃபேஸ்புக் விளம்பரங்கள் வாயிலாக, கடந்த மாதம் இரண்டு மில்லியன் வாடிக்கையாளர்களை சென்றடைய முடிந்தது,மேலும் எங்கள் செயல்பாடு தொடர்பாக இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து கொண்டோம், இதன் மூலமாக பிராண்டை பெரிய அளவில் கொண்டு செல்ல உதவியது, மேலும் இந்தியாவில் முதல் வெல்லம் கலந்த ஹாட் சாக்லெட்டை அண்மையில் அறிமுகம் செய்தார். அதுவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் பொள்ளாச்சியில் உள்ள பண்ணைகளில் இருந்து கோக்கோவை தருவித்து ஆக்ரா ஆலையில் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.‘டிக்கில்’ பிராண்டை துவக்கிய போது அனுவாவுக்கு 21 வயது தான். சிறிய காலத்தில் அவர் இந்தியா முழுவதும் தனது சேவையை கொண்டு சேர்த்துள்ளார்.இளம் வயதில் துவக்குவதன் சாதக, பாதகங்களை அவர் அறிந்திருக்கிறார்.
அடுத்ததாக, பல வகையான ஹாட் சாக்லெட் மிக்ஸ்களை உருவாக்கி, ஹாட் சாக்லெட் கலர் கார்டு போல எளிதாக வீட்டில் ஹாட் சாக்லெட்டை உருவாக்க உதவும் சிறந்த ஹாட் சாக்லெட்டை அளிக்க உள்ளார். ஹாட் சாக்லெட்டுடன் இணைந்து சாப்பிடக்கூடிய குக்கீஸ்ல் பிஸ்கெட் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறார். கோப்பைகள், டிஷர்ட்களையும் அறிமுகம் செய்ய உள்ளார்.அனுவா மாற்றுச் சிந்தனையை மலரச் செய்து,இளம் வயதிலேயே புதிய வெற்றியை பெற்று மிகச் சிறந்த தொழில் முனைவராக சாதித்து வருகிறார்.
அனுவாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் மாற்றுச் சிந்தனையை மலரச் செய்து இலட்சியத்தில் குறியாக இருந்து, தனக்கு ஏற்பட்ட தடைகளை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றியை வசப்படுத்திக்கொண்டார் என்பதில் ஐயமில்லை.
