Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழமரங்களுக்கு நடுவே சிவப்புக்கற்றாழை...

பனியன் நகரம், டாலர் சிட்டி என்ற பெயர்களால் அழைக்கப்படும் திருப்பூரில் பல்வேறு தொழில்கள் கொடிகட்டி பறப்பதைப்போல விவசாயமும் குறிப்பிட்ட இடங்களில் செழித்தோங்குகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, சேவூர், பல்லடம், காங்கேயம், உடுமலை, தாராபுரம், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பசுமைப் பிரதேசங்களாகவே காட்சி அளிக்கின்றன. இந்த ஊர்களில் தங்கள் மண்வளத்திற்கும், நீர்வளத்திற்கும் ஏற்ற பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். பல்லடத்தை அடுத்த எம்.ஊத்துக்குளியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயி சற்று வித்தியாசமாக மரப்பயிர்களுக்கு இடையே சிவப்புக்கற்றாழையை ஊடுபயிராக வளர்த்து வருகிறார். 6 ஏக்கரில் 6 ஆயிரம் செடி என பிரம்மாண்ட சாகுபடியில் ஈடுபட்டு வரும் அவரைச் சந்தித்தோம். `எங்களுக்கு சொந்தமாக 36 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதில் நாட்டுக்கோழி வளர்ப்பு, பல்வேறு காய்கறி பயிர்கள், மரப்பயிர்களை சாகுபடி செய்கிறேன். இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை உணர்ந்த நான் முதல்கட்டமாக 6 ஏக்கரில் முழுக்க முழுக்க இயற்கை முறையில் கொய்யா, நாவல், நெல்லி, சீத்தா, நாட்டு அத்தி, முருங்கை போன்ற மர வகைகளையும், சிறுகீரை, அரக்கீரை, தண்டங்கீரை, தட்டை, பாசிப்பயிர் உள்ளிட்டவற்றையும் சாகுபடி செய்கிறேன். கீரைகள் அனைத்தையும் நான் வளர்க்கும் கோழிகளுக்கு தீவனமாக போட்டுவிடுவேன்.

கொய்யா, நாவல், முருங்கை உள்ளிட்ட எந்த பயிர்களுக்கும் ரசாயன மருந்துகள் அடிப்பதே இல்லை. களையும் பறிப்பதில்லை. களைகள் சருகாக மாறி மட்கி உரமாகிவிடும். இந்தப் பயிர்களுக்கு மத்தியில் ஊடுபயிர் விளைவிக்கலாம் என திட்டமிட்டேன். கடந்த 2015ம் ஆண்டில் கோயம்புத்தூர் வள்ளலார் சன்மார்க்க இயக்கத்தைச் சேர்ந்த ஞானந்த சாமிகள் என்பவர் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு அறிமுகமானார். நான் என்ன விவசாயம் செய்து வருகிறேன் எனக் கேட்டறிந்த அவர் சிவப்புக்கற்றாழை குறித்து என்னிடம் தெரிவித்தார். நிறைய மருத்துவக் குணங்கள் கொண்ட சிவப்புக்கற்றாழையை பயிரிடுமாறு என்னை அறிவுறுத்தியதுடன் அதன் நாற்றுகளை தருவதாகவும் தெரிவித்தார்.

சிவப்புக்கற்றாழை என்றவுடன் எனக்கு ஆச்சிரியமாகத்தான் இருந்தது. ஞானந்த சாமிகள் கொடுத்தார் என்பதற்காகவே இதை வளர்க்கலாம் என்று நினைத்தேன். முதலில் 10 நாற்றுகளை கொடுத்தார். அந்த நாற்றுகளை மரப்பயிர்களுக்கு இடையே நட்டு வைத்தேன். அதன்பிறகு அதன் மருத்துவ குணங்கள் என்னவென்று படித்துப் பார்த்தபோதுதான் மரப்பயிர்களுக்கு ஊடுபயிராக வளர்க்கலாம் என்ற யோசனை தோன்றியது’’ என்றவர், சிவப்புக்கற்றாழை குறித்து சற்று விரிவாக பேசத்தொடங்கினார்.

``சிவப்புக்கற்றாழையைப் பொருத்தவரையில் மற்ற நாட்டுக்கற்றாழையைப் போன்று பூக்கள் வராது. இதனால் இந்தச்செடி வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். நட்டு வைத்த 6 மாதத்தில் அடித்தண்டு முற்றத் தொடங்கும். அந்த நேரத்தில் ஒரு செடியில் இருந்து மட்டும் 10 முதல் 12 வரையிலான நாற்றுகள் உருவாகும். ஒவ்வொரு சிவப்புக் கற்றாழை செடிகளில் இருந்தும் நாற்றுகளை எடுத்து 6 ஏக்கர் முழுவதும் நடத் தொடங்கினேன்.இந்தப் பயிருக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. செம்மண் பூமியில் 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடலாம். எங்கள் பூமி கரிசல் மற்றும் ஜல்லி கலந்த மண் என்பதால் இயற்கையாகவே ஈரத்தன்மையை தக்க வைக்கும் குணம் கொண்டது. இதனால் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சுகிறேன். களை எடுப்பதில்லை.

அதுவே தானாக மக்கி உரமாகிவிடும். நடக்கும் வழித்தடத்தில் மட்டும் கட்டர் வைத்து களைகளை வெட்டி விடுவோம். வேலி ஓரத்தில் இருக்கும் களைகளை அகற்ற கோமியம், எலுமிச்சை, கல் உப்பு ஆகிய மூன்றையும் ஊறவைத்து தெளித்துவிடுவோம். 5 அடிக்கு ஒரு செடி என்ற முறையில் நடவு செய்திருக்கிறேன். ஒவ்வொரு செடியும் 3 முதல் 4 அடி வரை உயரமும், 4 அடி அகலம் வரை வளரும். இந்தச் செடிகளுக்கு நோய் தாக்குதலோ அல்லது பூச்சி தாக்குதலோ வராது. அதனால் ரசாயன மருந்து அடிக்கும் செலவு இல்லாமலே இதை அறுவடை செய்யலாம்.மற்ற பயிர்களைப் போன்று சிவப்பு கற்றாழைக்கென்று சந்தை வாய்ப்பு இல்லை. நாம்தான் அதை உருவாக்க வேண்டும். புற்றுநோய்க்கு சிவப்புக்கற்றாழை நல்ல தீர்வளிக்கும் என இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் வாரத்திற்கு 3 முறை இங்கு வந்து சிவப்புக்கற்றாழையை வாங்கி சாப்பிடுகிறார். இயற்கை மருத்துவர்கள் சிலர் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் சிவப்புக்கற்றாழையை வாங்குகிறார்கள்.

அரை அடி வளர்ந்த சிறிய நாற்றுகளை ரூ.100க்கும், பெரிய செடிகளை ரூ.1,000க்கும் விற்பனை செய்கிறோம். கோடை காலத்தில் அதிக ஆர்டர்கள் வந்தன. இதுவரை இதை வியாபாரமாக செய்யவில்லை. இப்போதுதான் முறையாக விற்பனையைத் தொடங்கி இருக்கிறோம். நாற்று இல்லாமல் கற்றாழை ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்கிறோம். நஷ்டம் என்று எதுவும் இல்லை. 5 ஆண்டுகளாக இதில் இருந்து வருமானம் எடுத்து வருகிறோம். தொடக்கத்தில் மெல்ல மெல்ல விற்பனையானது. தற்போது நாளொன்றுக்கு சுமாராக ரூ.1,000 வரை சிவப்புக் கற்றாழை மூலம் வருமானம் கிடைக்கிறது’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.