கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா? எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்: பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வரும் மூத்த நிர்வாகிகள்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திப்பதற்கு அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் சென்னையை அடுத்த வானகரம் வாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் செயற்குழு - பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின் தலைமையிலான குழுவினர் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிட கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதேநேரம், வருகிற சட்டமன்ற தேர்தலை அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க உள்ளது. ஆனால், இந்த கூட்டணி கட்சியில் இருந்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இவர்களை தவிர, வேறு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இதுபற்றியும் நடைபெறும் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும், அதிமுகவில் இருந்து வெளியே சென்ற தலைவர்களை ஒருங்கிணைத்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை சேர்க்க முடியாது என்று கூறி விட்டார். பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு கெடு விதித்தார்.
இதையடுத்து செங்கோட்டையனையும் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக எடப்பாடி நீக்கி விட்டார். இதனால் விரக்தி அடைந்த செங்கோட்டையன் தற்போது விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்து விட்டார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியனும், இனி அதிமுகவில் இருந்தால் நமக்கு எதிர்காலம் இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து விட்டார். எடப்பாடியின் இதுபோன்ற பிடிவாத போக்கால் தற்போது அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்களும் தங்கள் கருத்தை வெளியில் சொல்ல முடியாமல் மவுனியாக பயணம் செய்கிறார்கள். அதிமுக மற்றும் அக்கட்சியில் உள்ள தலைவர்களுக்கு 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமன்றி, வாழ்வா சாவா போராட்டமுமாக அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேச சிலர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பு அல்லது ஒருங்கிணைப்பு இல்லை என்று உறுதியாக சில முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ப்பது குறித்தும் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.


