‘‘சீட் கிடைப்பதை தடுப்பதாக நினைத்து மாவட்டத்திற்கு மேடையில் நேரடியாகவே சவால் விட்டாராமே இலைக்கட்சி மாஜி தெரியுமா..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என முடியும் கடலோர மாவட்ட இலைக்கட்சியில் கோஷ்டி மோதல் உச்சத்திற்கு வந்துள்ளதாம். உச்சமடைந்த கோஷ்டி மோதல் இப்போது மேடையிலேயே வெளிச்சத்திற்கு வந்து விட்டதாம்..
சமீபத்தில் இலைக்கட்சி சார்பில் மாவட்டத்தின் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க.. அப்போது பேசிய மாஜி பெல்காரர், ‘சாக்ரடீஸ், ஏசுநாதர், கட்டபொம்மன் உள்ளிட்டோர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டனர். அதேபோல என்னையும் வீழ்த்த இங்குள்ள சிலர் முயற்சிக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது’ என படு ஆவேசமாக வீர வசனம் பேசியுள்ளார். இதைக் கேட்ட கட்சியினர், ‘நாம நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் எதற்காக நமக்கே உள்குத்து வைக்கும்படி மாஜி இப்படி பேசுகிறார்..
இப்பிடி இருந்தா எப்படி...?’ என்று புலம்பியிருக்கிறாங்க.. நிர்வாகிகளோ, ‘கட்சிக்குள் நடக்கும் கூத்து தெரியாதா? மாஜிக்கும், தற்போதைய மாவட்டத்திற்கும் ஆகாது.. தனக்கு சீட் கிடைப்பதை மாவட்டம் தடுப்பதாக மாஜி நினைக்கிறார். அதனால்தான், மேடையிலேயே மாவட்டத்திற்கு நேரடியாக சவால் விட்டுள்ளார்’ என தொண்டர்களிடம் கூறியிருக்கிறாங்க..
இது தான் கடலோர மாவட்ட இலைக்கட்சியில் இப்போது ஹாட் டாபிக்காக போயிட்டு இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரோட்டை சீர்படுத்திய ஊர்மக்களை ஓடோடி வந்து தடுத்துட்டாங்களாமே அதிகாரிங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பிரெஞ்சு கலாச்சாரம் கொண்ட சிறிய யூனியனான புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது.. இதில் மலராத கட்சி பிரதிநிதி முழம்குமாருக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டதாம்.. மாதங்கள் 3 கடந்தும் இலாகா இல்லாமல் மிகுந்த வேதனையில் இருக்கிறாராம்..
தொழிலதிபரின் புதிய கட்சியில் முக்கிய அங்கமாகிட முழம்குமாரையும், அவரது மகனையும் உடனே நீக்க வேண்டுமென மலராத கட்சியில் போர்க்கொடி எழுந்துள்ளதாம்.. ஆனால் புல்லட்சாமியோ கூட்டணி கட்சியின் உள்கட்சி பூசலை வேடிக்கைபார்த்தபடி உள்ளாராம்.. இது ஒருபுறமிருக்க முழம்குமாரின் தொகுதியில் சேதமடைந்த சாலையை ஊர்மக்களே திரண்டு சொந்த செலவில் சீரமைக்க தயார் ஆனார்களாம்..
மட்டன், சிக்கன் விருந்து உபசரிப்பு நடத்தும் முழம்குமாரோ தொகுதி அடிப்படை பிரச்னையை தீர்க்காதது ஏனோ என்ற கேள்வி பரவ, அங்கு ஓடோடி வந்த அதிகாரிகளோ சீரமைப்பை தடுத்து நிறுத்தி, பூஜை போட்டு விரைவில் வேலை துவங்குவோம் என உத்தரவாதம் கொடுத்து சென்றார்களாம். இதுபற்றிதான் யூனியன் முழுக்க பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டணி குறித்து இலைக்கட்சி தலைவரால பேச முடியாதபடி பூட்டு போட்டதால பதினாறு தொகுதியை தள்ளிவிடச் சொல்றாராமே தோட்டத்துக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டிற்குள் கால்ஊன்றிவிட வேண்டும் என்ற தீராத நோக்கத்தில் மலராத கட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது ஊரறிந்த விஷயம்.. அதுவும் மம்மி இல்லாத இலைக்கட்சியை அப்படியே சாப்பிட்டுவிட வேண்டும் என்பதும் அவர்களின் நோக்கமாக இருக்குதாம்.. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இலைக்கட்சி தலைவரை தங்களின் கைக்குள் கொண்டு வந்திருந்த நேரத்தில் திடீரென வெளியே ஓடிவந்துட்டாராம்..
இப்போதும் அதுபோன்று இலைக்கட்சி தலைவரை விட்டுவிட கூடாது என்பதால் உள்துறையானவர், ஓராண்டிற்கு முன்பே ஓடிவந்து மூக்கணாங்கயிறு போட்டுட்டு போயிட்டாராம்.. இதனால் தமிழ்நாட்டில் எந்த கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற முடிவெடுக்கும் பவர் இலைக்கட்சி தலைவருக்கு இல்லாம போயிட்டதாம்.. இதற்கான அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் உள்துறையிடம் சிறுசிறு கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கிட்டாங்களாம்..
ஆனால் பிரமாண்டமான கூட்டணியை அமைப்பேன் என சும்மா தான் இலைக்கட்சி தலைவர் சொல்லிக் கிட்டிருப்பதாக கட்சிகாரங்களே சொல்றாங்களாம்.. அதே நேரத்தில் இந்த ஜென்மத்தில் உடையவே உடையாது என்று மார்தட்டிக்கொண்டிருந்த மாம்பழம் ரெண்டா பிளந்துபோச்சாம்.. இவர்கள் ரெண்டுபேரும் மலராத கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டிருக்காங்களாம்.. தைலாபுரத்து தோட்டத்துக்காரரோ ரொம்பவும் விறைப்பாக இருக்காராம்.. கட்சியும் தொண்டர்களும் எங்களிடம் குவிந்துகிடக்காங்க..
அதனால ஒரு 16 தொகுதியை தள்ளிவிடுங்கன்னு சொல்றாராம்.. இதன்மூலமா 75 தொகுதி உங்களுக்கு கிடைக்குமுன்னு அடிச்சி சொல்றாராம்.. ரெண்டுபேரும் உடைந்து கிடக்கும் நிலையில் இவ்வளவு கேட்பது நியாயமா என்றால் நாங்கதானே கட்சி என்கிறாராம் தந்தை தரப்பு.. அதிலும் முக்கியமான ஒரு கண்டிசனும் இருக்குதாம்.. மாம்பழம் பெயரைச் சொல்லி வரும் பனையூரைச் சேர்ந்தவரை கூட்டணியில் சேர்க்ககூடாது.. அப்படி சேர்ப்பதாக நினைத்தால் கூட நாங்கள் உங்களுடன் இருக்க மாட்டோம் என வீரமாக சொல்றாராம்..
பவர் வாய்ந்த இலைக்கட்சியுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், கூட்டணி குறித்து இலைக்கட்சி தலைவரால் பேசமுடியாது... அவரை திண்டுக்கல் பூட்டுபோட்டு பூட்டியாச்சி.. அவருக்கான 155 தொகுதியை மட்டும் வாங்கிக்கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகுதியை கூட்டணிக்கு பிரித்து கொடுக்கும் பவர் உள்துறையானவரிடம் தான் இருக்கிறது எனவும் தோட்டத்துக்காரங்க சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

