Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்கள் தலைவர்களை உதாசீனப்படுத்தி பேசியவர்களுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடியின் தலை தான் தொங்கி உள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி

சென்னை: சென்னை புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். இதில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் பிரகாஷ், சி.எம்.டி.ஏ சிஇஓ சிவஞானம், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது: வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் ரூ.6,000 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது. கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு திடல், பேருந்து நிலையங்கள், முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. சென்னையில் இந்த மாத இறுதிக்குள் 10 முதல் 15 முதல்வர் படைப்பகங்கள் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 3.75 ஏக்கர் பரப்பளவு கொண்ட கன்னிகாபுரம் கால்பந்து மைதானம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

குத்துச்சண்டை, டென்னிஸ், செஸ், கேரம் போன்ற பல்வேறு தளங்கள் தயார் செய்யப்படுகிறது. இம்மாதம் 20ம் தேதிக்குள் கன்னிகாபுரம் மைதானம் பயன்பாட்டிற்கு வரும். தொங்கிப்போன தலை எடப்பாடி பழனிசாமியுடையதுதான். அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டுள்ள அந்த இயக்கம் அண்ணாவை சாடும்போது அமைதியாக உள்ளனர். எம்ஜிஆரை சாடும் போதும் மவுனமாக உள்ளனர். ஜெயலலிதாவின் பெயரை உதாசீனப்படுத்தி பேசும்போதும் வாய்மொழி இல்லாமல் மவுனமாக இருந்தனர்.

தங்களின் தலைவர்களை உதாசீனப்படுத்தி பேசியவர்களுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் தலைதான் தொங்கி உள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் போல் தமிழக முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் நடை மேம்பாலம் பணிகள் துரிதமாக நடக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் நடைமேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.